ஜூலை 01, 2020

மரங்களில் மனிதக் காய்கள்- தோழர் K.S கவிதை

மரங்களில் மனிதக் காய்கள்



நாற்றுப் பறித்து முடித்த 
நாற்றங்கால் தரும் மணம்!

நடவு வயலில் பரம்படித்த 
சேற்றில் ஓர் மணம்!

நடுகை திரும்பி காற்றில்
அலையும் நாற்றிலும் நறுமணம்!

பிஞ்சு நெல்லைப் பிரசவிக்கும் 
பொதியிலும் ஓர் மணம்!

நிறம் பழுத்த நெற்கதிர்கள்
நிலம் நோக்க வரும் மணம்! 

கதிர் அறுத்த வயலும் 
காற்றில் தரும் மணம்!

நெல் உதிர்த்த தாழ்கள் 
வைத்தூறாய் மாறலில் ஓர்மணம்! 

அவியும் நெல்லிலும் மணம்
ஆக்கிய சோற்றிலும் மணம்!

இத்தனை மணம் தந்த 
இவன் மட்டும் மணக்கவில்லை? 

உடுத்த பருத்தி தந்தும் 
உலவுவது அரை உடம்பாய்! 

விளைந்த பொருளுக்கு விலையுமில்லை 
வாழும் வகையும் தெரியவில்லை! 

வைத்த கடன் திரும்பவில்லை 
வளர்த்த மரம் காய்க்கவில்லை! 

அதனால்-

தாம்புக் கயிற்றில் தொங்குகிறான் 
தானே மரங்களில் காய்களாக!

தானே அழிந்திடும் தனிப்பெரும் மனிதனை 
தக்கவைக்க தகவமைப்போம்!

---காரைக்குடி கார்மேகம் செல்வராசு
ஓவியம் : 
மதி (Divisional Secretary Gr C)


கருத்துகள் இல்லை: