ஜனவரி 09, 2024

தோழர் M.குழந்தை ABPM பணி ஓய்வு

 நிறைவான _ பணி ஓய்வு நிகழ்வு :


சிவகங்கை கோர்ட்ஸ் Soவில் பேக்கராக பணியாற்றி வந்த தோழர் - குழந்தை அவர்களின் பணி ஓய்வு நிகழ்ச்சி நிரலை தோழர். அம்பிகாபதி AlGD SUதலைவர் மற்றும் P3 ன் செயலர் தோழர்.மதிவாணன் அவர்களின் கூட்டுத் தலைமையிலும், P3 ன் உதவி கோட்ட செயலர் தோழர். நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடந்தேறியது.

பணி ஓய்வு நிகழ்விற்கு பல பகுதியிலிருந்து பெருவாரியான தோழர்கள் /தோழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, சிறப்பித்தது பெருமை கொள்ளும் படி அமைந்தது.

மேலும் நமது கோட்டத்தின் தொழிற்சங்க வழிகாட்டல் முன்னோடிகளும், பணி ஓய்வு பெற்ற சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் களுமான மரியாதைக்குரிய தோழர்.செல்வராஜ் அவர்களும், தோழர் .சேர்முகப் பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு தோழருக்கு பொன்னாடை போற்று மகிழ்வித்தனர்.

முச்சங்கங்களின் சார்பாக தோழருக்கு நினைவு பரிசு கெளரவித்தனர்.

கோட்ட சப்-டிவிசன் நிர்வாகம் சார்பாக பணி ஓய்வு பெற்ற தோழருக்கு சிறந்த பணி சேவையாற்றியமைக்கான நற்சான்றிதழ் - விருதும் மற்றும் கிராஜிட்டி / செவரன்ஸ் தொகைக்கான உத்திரவு ஆனையினையும் , மரியாதைக்குரிய, சிவகங்கை உபகோட்ட அதிகாரி (ip) அவர்கள் வழங்கி மரியாதை செய்து கௌரவித்தார். கோட்ட அதிகாரி மற்றும் உப-கோட்ட அதிகாரி அவர்களுக்கு கோட்ட சங்கங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

இறுதியாக கதாநாயகனின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.ஜனவரி 06, 2024

தோழர் O.P.குப்தா நினைவு நாள்

 
ஒப்பிலாத் தலைவன் O P குப்தா! 

 எதைக் கொடுத்தும் ஒற்றுமை! 

என்னையே கொடுத்தும் ஒற்றுமை என வாழ்ந்து காட்டிய தொழிற்சங்க பிதாமகன்!   

 நினைவு நாளில் தபால் தந்தி ஊழியர் சம்மேளனம் அமைத்து சந்தித்த போராட்டங்களையும் ஆற்றிய தொழிற்சங்க பணியையும் நினைவில் கொள்வோம்!  

ஓங்குக தோழர் குப்தா புகழ்! - Com K.S


தோழர் M.நரசிங்கபெருமாள் BPM செங்குளிபட்டி பணி ஓய்வு விழா!

 சிறப்பான பணி ஓய்வு - பாராட்டல் :


கடந்த 06-01-24 அன்று நடராஜபுரம் So/செங்குளிப்பட்டி Bo வில் GDSB PM ஆக பணியாற்றி வந்த மூத்ததோழர்.நரசிங்க பெருமாள் அவர்கள் பணி ஓய்வு பாராட்டல் நிகழ்வு தோழர்.நெடுஞ்செழியன் Spm மற்றும் AlGD SUன் தலைவர் தோழர்.அம்பிகாபதி ஆகியோரின் கூட்டுத் தலைமையிலும், NF PE - P3 பேரியக்க உதவி கோட்ட செயலர் தோழர். நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும் வெகு சிறப்பாக அமைந்தது.

கோட்ட முச்சங்கங்களின் சார்பாக தேnழருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்ததும், அப்பகுதியினை சார்ந்த ஊழியர் அனைவரும் ஒரு சேர ஒரு கூட்டுக் குடும்பமாக இணைந்து பொன்னாடை, மாலை, மற்றும் இனிப்புகள் வழங்கி அவருக்கு பாராட்டல் மரியாதை செய்த விதம் பெருமை கொள்ள வைத்தது.

இறுதியாக அவரின் ஏற்புரை அனைவரின் மனதிலும் நெகிழ்வினை ஏற்படுத்தி, கண் கலங்க வைத்தது.

கோட்ட சப்-டிவிசனிலிருந்து உப-கோட்ட ஆய்வாளர் அவர்கள், பணி ஓய்வு பெற்றதோழரை , நேரில் வந்து வாழ்த்தி மரியாதை செய்ததோடு, அவருக்கு சேர வேண்டிய கிராஜிட்டி மற்றும் செவரன்ஸ் தொகையினை வழங்கி ஊக்குவித்ததோடு, கோட்ட நிர்வாகம் சார்பாக . அவருக்கு சிறப்பாக பணியாற்றியமைக்கான 'நற்சான்றிதழ்' விருதினையும் கொடுத்து மென்மேலும் கௌரவித்தது மிகவும் நிறைவான மகிழ்வினை ஏற்படுத்தியது.

கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கும், உப ேகாட்ட ஆய்வாளர் (ip) அவர்களுக்கும், சப்-டிவிசன் தோழர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
டிசம்பர் 28, 2023

தோழியர் P.மெடில்ட பணி ஓய்வு

 


இன்று பணி நிறைவு எய்தும் தோழியர் மெடில்டா ஒரு மூத்த உறுப்பினர்.

சங்கம் விடுக்கும் போராட்டங்களில் தவறாது கலந்து கொள்பவர்.

அவரது கணவரும் கணவரின் தங்கை திருமதி தெரசா (Ex BPM Melapasalai)  ,இருவரும் நமது கோட்டத்தின் மூத்த தோழர்கள் அனைவருக்கும் நன்கு பரிட்சயமான வர்கள்.


பணி நிறைவுக்குப் பிந்தைய நாட்களும் தோழியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நலமும் வளமும் அமைதியுமாய் அமைந்திட நல் வாழ்த்துகள்.

ஜூலை 10, 2023

தோழர் D.ஞானையா நினைவு தினம் 8.7.2023

தோழர் D.ஞனையா அவர்களுக்கு சிவகங்கை HO வில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தோழர் D.ஞானையா நினைவு தினம்

தோழர் D. ஞானையா மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுவிக்கோட்டை என்ற ஊரில் 7.1.1921 அன்று பிறந்தார். 1941ல் கரூரில் அஞ்சலக எழுத்தராக பணியைத் துவக்கினார்.


இராணுவ அஞ்சல் சேவையில் சில காலம் பணியாற்றிய பின் திருச்சிக்கு திரும்பினார். அங்குதான் அவர் தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். உதவிக்கோட்டச் செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE யின் செயலராக 1963லும், NFPTE யின் மாபொதுச்செயலராக 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய 19.9.1968 ஒருநாள்வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தினார் அதற்காக ஜெயில், சஸ்பென்ஷன், டிஸ்மிஸ் என தண்டனைகளைப் பெற்றவர். அதன் மூலம் மத்திய அரசு உழியர்கள் சங்கங்களுக்கிடையே NFPTE அமைப்புக்கு எனத் தனிப்பெருமை சேர்த்தார். JCM (Joint| | Consultative Machinory) கூட்டு ஆலோசனைக்குழு 1966ம்ஆண்டு அமைக்கப்பட்டது. அரசுடன் பலகட்ட பேச்சுவர்த்தை நடத்தி அதை அர்த்தமுள்ள அமைப்பாக மாற்றினார். NFPTE யின் மாபொதுச் செயலராக இருந்தபோது பல நாடுகளிலுள்ள தொழிற்சங்க அமைப்புகளின் அழைப்பின் பேரில் அங்கு சென்று சர்வதேச அரங்குகளில் உரையாற்றி இந்திய அஞ்சல் ஊழியருக்கு பெருமை சேர்த்தார்.


அஞ்சல்துறை தந்த அரிய முத்து அபாரமான நினைவாற்றல் கொண்டவர் ஒப்பற்ற அறிவு ஜீவி; மார்க்சிய அறிஞர். இந்திய வரலாறு, சீன எல்லைப் பிரச்சனை பாகிஸ்தான் பிரிவினை, சமூக நீதி, பென்கள் முன்னேற்றம் என எல்லா விஷயங்களிலும் பரந்துபட்ட ஞானம் உள்ளவர். வாசிப்பதும் எழுதுவதும் அவரோடு ஒட்டிப் பிறந்தவை. தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களும், நூற்றுக்கணக்கான சிறுபிரசுரங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.


NFPTE இயக்கத்தின் வைர விழா மாநாட்டை நமது கோட்டச்சங்கம் அஞ்சல் நான்கு GDS சங்கங்களோடு சேர்ந்து 2014ல் சிவகங்கையில் நடத்தியபோது தனது 93 வது வயதிலும் மிக ஆர்வமாக ஒரு இளைஞரைப் போல் கலந்து கொண்டு உரையாற்றி நமது கோட்டத்துக்கு பெருமை சேர்த்தார்.


 தனது 97-வது வயதில் 8.7.2017 அன்று கோயம்புத்தூரில் காலமானார். வருகிற 8.7.2022ல் அவரது ஐந்தாவதுநினைவு தினம் வருகிறது. அன்றைய தினத்தில் அவருக்கு நம் கோட்டம் முழுவதும் அஞ்சலி செலுத்துவோம். அவரது நினைவுகளைப் போற்றுவோம் அவரைக் கற்போம்; அவர் காட்டிய போராட்டப் பாதையில் பீடு நடை போடுவோம்.
கொண்டாடப்பட்டு வருகின்றன.


சிவகங்கை கோட்ட அஞ்சல் மூன்று சங்க ஈராண்டறிக்கை 19.06.2022

ஜூன் 30, 2023

தோழியர் S.லலிதா SPM திருப்புவனம் பணி ஓய்வு விழா!

பணி நிறைவு - பாராட்டு
💞🌸💞🌸💞🌸💞🌸

சிவகங்கை கோட்டம் திருப்புவனத்தில் உதவி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வரும் NF PEயின் பேரியக்க சங் க உறுப்பினரான மூத்ததோழியர்.S. லலிதா அவர்கள் வரும் 30 | 6 | 2023 வெள்ளிக்கிழமையன்று இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்கள்.

அவர் எப்போதுமே இன் முகத்துடன் எந்த வித வேறுபாடின்றி அனைத்து பிரிவு ஊழியர்களிடத்திலும் அன்பாக பேசி பழகக் கூடிய தொழிற்சங்க பிடிப்பு மிக்க உன்னதமான தோழியர். தொழிற்சங்க நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்வதோடு மட்டுமின்றி, சங்க வரலாற்று செய்தியினை சுவைபட பேசி ஊழியர்களிடத்தில் கொண்டு சேர்ப்பவர் தோழியர். லலிதா அவர்கள்.

அவரின் பணி ஓய்வுகாலங்கள் முழுதும், ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி நிறைந்ததாக அமைந்திட கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.'

இடம்: திருப்புவனம் அஞ்சலகம் .

நேரம் : மாலை 4.30 மணி

நாள் : 30 - 06-23 வெள்ளிக்கிழமை

தோழமையுடன் .'

K.மதிவாணன்,
செயலர் - P3

P. நடராஜன்
செயலர் -P 4

S செல்வன்
செயலர் AI GD SU
சிவகங்கை DN
💞💕🌷💞🌸🌷💕🌸🌷💕💞

ஜூன் 22, 2023

திருப்புவனம் பகுதிக்கூட்டம்-21.6.23

சிறப்பு மிகு பகுதிக்கூட்டம் :

21-06-23ல் திருப்புவனம் / பொட்ட பாளையம் பகுதிகளை உள்ளடக்கிய, முச்சங்கங்களின் பகுதிக் கூட்டம் திருப்புவனம் Soவில் AlGD SUன் தலைவர் தோழர். m அம்பிகாபதி, தோழியர். லலிதா போஸ்ட் மாஸ்டர் அவர்களின் கூட்டுத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது"

P3 செயலர் தோழர்.மதிவாணன், GDS ன் பொருளாளர், தோழர். A. ரத்தின பாண்டி மற்றும் பொட்ட பாளையம்Spm தோழர்.ராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

திருப்புவனம் / பொட்ட பாளையம் பகுதியினை சேர்ந்த தோழர் / தோழியர் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜூன் 11, 2023

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க 13 வது கோட்ட மாநாடு.

சிவகங்கை கோட்டத்தின்புறநிலை ஊழியர்கள் சங்கத்தின் 13வது கோட்ட மாநாடு மானாமதுரை தோழர் ஞானய்யா நினைவு அரங்கில் 11.06.2023 ஞாயிறு அன்று சிறப்புடன் நடைபெற்றது.

மே 20, 2023

கண்டன ஆர்ப்பாட்டம்!

இன்று 20.5-23 மாலை 5.30 மணியளவில், பேரியக்கங்களின் அங்கீகார ரத்தை திரும்ப பெற கோரியும், நாடெங்கும் தலைவிரித்தாடும் புதிய அக்கவுண்டு கணக்கு துவங்க சொல்லி தொடர்ந்து,டார்கெட் கொடுத்து டார்ச்சர் பண்ணி வரும் அதிகாரிகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை Al GDSUன் கோட்ட தலைவர் தோழர்.அம்பிகாபதி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

ஆர்பாட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி மூத்த தோழர். S.ராஜேந்திரன் அவர்களும், Ex.p4 செயலர். G.மீனாட்சிசுந்தரம் அவர்களும்,P3 தலைவர் கரிகாலச் சோழன் அவர்களும்,P3ன் நிதி செயலர் திருக்குமார் அவர்களும், கோட்ட உதவி தலைவர். தோழியர்.தர்மாம்பாள் அவர்களும், தோழர்.திருமலை அவர்களும், கோட்ட செயலர், தோழர். K. மதிவாணன் P3 அவர்களும், கோட்ட செயலர் தோழர்.P.நடராஜன் P4 அவர்களும் எழிச்சியுரை ஆற்றினார்கள்.

இறுதியாக விண்ணதிரும் வகையில் மாநில சங்க சுப்ரீம் கவுன்சிலர் தோழர். G.நாகலிங்கம் உதவி செயலர் அவர்கள் ஆர்ப்பாட்ட கோரிக்கையினை, உரத்த குரலில் கோஷமிட்ட முழங்கினார்.

அனைத்து பகுதியிலிருந்தும் தோழர் & தோழியர்கள் கலந்துகொண்டது வெற்றி நிகழ்வாக அமைந்தது.

தோழமைகளுக்கு நன்றி! நன்றி!

செல்வன். S
செயலர் Al GDS U
சிவகங்கை DN

மே 17, 2023

பணி நிறைவு விழா!

பணி நிறைவு:

மானாமதுரை சப் - டிவிசன் சாலைக்கிராமம் So வண்டல் Boவில் கடந்த 38 வருடங்களாக GDS BPM ஆக பணியாற்றி வந்த Al GDSU பேரியக்க சங்கத்தின் மூத்த தோழர். M.ஹைதர் அலி அவர்கள் 13.5.23 அன்று பணி ஓய்வு பெற்றார். அதற்க்கானவிழா  சனிக்கிழமை 17.05.23 அன்று சாலைகிராமம் SO வில் நடைபெற்றது.

தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்வினிலும் தவறாது கலந்துகொள்ளக்கூடிய தன்னலமற்ற தோழரவர்.

அவரின் பணி ஓய்வு வாழ்க்கை மிக சிறப்பாக, ஆனந்தமாக அமைந்திட கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

தோழமையுடன்...

K. மதிவாணன்,
செயலர்-P3

P. நடராஜன்,
செயலர் - P4

S. செல்வன்
செயலர் Al GDSU
சிவகங்கை DN
🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸

மே 06, 2023

அங்கீகார ரத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

 படை திரண்டு வாரீர்!

வாரீர்! தோழமைகளே!

நமக்கு பாதுகாப்பு கொடுத்து, முழு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிவருகின்ற பாரம்பரிய தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தினை முடக்கிவைத்திருக்கின்ற அஞ்சல் இலாக்கா மற்றும் மத்திய அரசினைக் கண்டிக்கும் வகையில் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் செய்திட தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றது.

அதனடிப்படையில் வரும் 09 - 05 - 2023 மாலை 6 மணியளவில் சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பரிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதனை தெரியப்படுத்திக்கொள்கின்றோம். அதற்குரிய நோட்டீசும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நினைக்கின்றோம்.

தயவுசெய்து செய்திகளை படித்துவிட்டு வெறுமனே நின்றுவிடாமல் சிவகங்கை வந்துசேரவும். முக்கியமாக SPM's தோழமைகள் அனைவரும் அலுவலகப்பணியினை முடித்துவிட்டு மாலை6 மணிக்கெல்லாம் வந்துசேர சரியாக இருக்கலாம்.

அங்கீகார பறிப்பினை கண்டித்து Al GDSU சங்கங்களும் போர்க்கொடி தூக்கி தார்மீக ஆதரவு தந்துபோராடி வருகின்றது.

தமிழ் மாநில AlGDSU மற்றும் அகில இந்திய AlGDSU சங்கங்களுக்கு சிவகங்கை கோட்ட சங்கங்கள் வீரமிகு போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. தொழிற்சங்கம் என்பது அனைவருக்குமே பாதுகாப்பான ஆயுதம் என நிருபனமாகியிருக்கின்றது.

தோழமையுடன்...

P. நடராஜன்,

செயலர் - P4

Sசெல்வன்,

செயலர் Al GDSU

சிவகங்கை DN


மே 05, 2023

தோழர் காரல் மார்க்ஸ் 205வது பிறந்த நாள்!

 தோழர் காரல் மார்க்ஸ்

205வது பிறந்த நாள்

 

உலகத் தொழிலாளர் விடுதலைக்காக உயரிய தத்துவம் தந்த புரட்சியாளன் மாமேதை மார்க்சின் இல்லற வாழ்வு மிகுந்த துயரமும் வறுமையும் நிறைந்தது.


தனது உற்ற தோழன் ஏங்கல்ஸிற்கு எழுதிய கடிதங்களில் வறுமையை மார்க்ஸ் விவரித்துள்ளார்.


எடுத்துக்காட்டாக சில. 


நியூயார்க் ட்ரிப்யூன் என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களை அனுப்புவதற்கு போதிய

ஸ்டாம்பு வாங்க வழியில்லாமல் குழந்தைகளின் பழைய பூட்ஸ்களை அடகுவைத்து கடன் வாங்கி இருக்கிறார்.  


குடும்பச் செலவிற்கு தன் மேல் சட்டையை அடகு வைத்துவிட்டு பல நாட்கள் சட்டையில்லாமல் வெளியில் செல்ல வாய்ப்பின்றி வீட்டிலே அடைந்து கிடந்ததுமுண்டு.


மார்க்சின் துணைவியார் ஜென்னி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பெல்ஜியம் நாட்டு மந்திரியின் சகோதரி. தானே விரும்பி கைப்பிடித்த மார்க்சுடன் இல்லற வாழ்வில் சந்தித்த வறுமையே அதிகம்.

இருப்பினும் தன் கணவனின் இலட்சியம் நிறைவேற வசதிகளைத் தியாகம் செய்து வறுமையைப் பகிர்ந்து கொண்டார்.


மார்க்சுடன் இல்லற வாழ்வில் சந்திக்கும் வறுமை குறித்து தன் நண்பனுக்கு ஜென்னி எழுதிய கடிதத்திலிருந்து....


கடுமையான முதுகு வலி மற்றும் மார்பகவலி இவற்றுடன் என் குழந்தைக்கு பாலூட்டுவேன். ஆனால் குடித்த பாலைவிட குழந்தை அதிகமாய் என் தூக்கத்தைப் பறித்துக் கொண்டது .சமீபமாக வலிப்பு நோய் ஏற்பட்டு உயிருடன் போராடுகிறது.


ஒருமுறை பால் குடிக்கும்போது வலிப்பு வந்துவிட பற்கள்பட்டு மார்பில் வெளியான  இரத்தத்துடன் பாலையும் சேர்த்து குழந்தை பருகியது. 


குடியிருந்த வீட்டைக் காலி செய்ய ஐந்து பவுன் கொடுக்க முடியாதபோது ஏலம் போடும் தரகர்கள்  துணி மணிகளோடு குழந்தைகள் கதறக் கதற  பொம்மைகளையும் எடுத்துக் கொண்டார்கள். 


வீட்டில் இருந்த படுக்கைகள் தட்டு முட்டுக் சாமான்கள் இவற்றைவிற்று ரொட்டிக்காரன் பால்காரன் வைத்தியன் இறைச்சிக் கடைக்காரன் இவர்களின் கடனைத் தீர்த்த பின்பே வேறு வீட்டுக்கு குடி புகுந்தோம். 


கடைசிக்குழந்தைபிரான்சிஸ்கா மார்புச்சளியால் இறந்து போனது.


பணமுடை காலத்தில் இறந்து போன குழந்தைக்கு சவப்பெட்டி வாங்க முடியவில்லை.

நண்பர் ஒருவர் பெரியமனதுடன் கொடுத்த  இரண்டு பவுனில் தான் சவப்பெட்டி வாங்கினேன். அந்தக் குழந்தை பிறந்த போதும் தொட்டில் வாங்க முடியாது போனது போல  இறந்த போதும் சவப்பெட்டி வாங்க கஷ்டப்பட்டுப் போனேன்.


மார்க்சின் இறுதிநாட்களில் ஏங்கல்ஸ் தான் பண  உதவி செய்தார். 


கட்டுரைகள் வெளியாவது குறைந்து பத்ரிகை வருவாய் இல்லாதபோது மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்.


" என்னை யாராவது பூமிக்குள் புதைத்து விட்டால் நான் திருப்தியடைவேன். இந்த மாதிரி வாழ்க்கையைவிட அதுவே மேல்."


வறுமை கோரப்பிடியை

இறுக்கும் போது தனது இரண்டு பெண்களை பெரிய மனிதர்கள் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்துவது, மணைவி கைக்குழந்தையுடன்  அநாதை விடுதிக்கு சென்று விடுவது என தீர்மானித்த போது ஏங்கல்ஸ் அனுப்பிய  ஐந்து பவுன் நிலைமையை மாற்றியது.


வைத்தியம் பார்த்தவனுக்கு கடன் செலுத்த முடியாமல் வழக்குத் தொடர்வேன், 

வீட்டிற்கு கரண்டு தண்ணீர் சப்ளை நிறுத்திவிடுவேன் என மிரட்டிய போது மார்க்ஸ் யாருக்கும் தெரியாமல் மான்செஸ்டர் ஓடிப்போனதும் உண்டு. 


1881ல் ஜென்னியும் 1883ல் மார்க்சும் இறந்து போகின்றனர்.


வறுமை சூழ்ந்த வாழ்வில் தான் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையும் 1867ல்

"காபிடல்" முதல் தொகுதியும் மறைவிற்கு பின் 1883 மற்றும் 1894ல் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளும் வெளியாகின.


உற்ற தோழன் ஏங்கல்ஸ், மார்க்ஸ் இறப்பில் மயான  உரையில் மார்க்ஸ் இறந்துவிட்டான் எனச் சொல்ல வில்லை. மார்க்ஸ் தான்

சிந்திப்பதை இன்றுடன் நிறுத்திக் கொண்டான் என்றார்.


1895ல் ஏங்கல்ஸ்  மரணமடைந்தார். 


உலகு போற்றும்   இலட்சியவாதிகள் வாழ்க்கை பெரும்பாலும் துயரைத் தான் தோழமை பூண்டதாய் இருந்துள்ளது.


-கா. செல்வராஜ்

மே 02, 2023

தோழர். A. அந்தோணி ABPM GDS MD பிளார் BO பணி நிறைவு-பாராட்டல்

 பணி நிறைவு-பாராட்டல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


கல்லல் So பிளார் Boவில் கடந்த 42 ஆண் டுகளாக ABPM (GDS mD)யாக பணியாற்றி வரும் மூத்த Al GDSU உறுப்பினர் தோழர். A. அந்தோணி அவர்கள் 02 - 05 -23 செவ்வாய்கிழமையன்று பணி ஓய்வுபெறவுள்ளார்கள் என்பதனை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.

பணி ஓய்வுகாலம் முழுதும் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும், குடும்ப சகிதத்தோடும், பல்லாண்டுகாலம் வாழ்ந்திட கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்,

தோழமையுடன்...

K. மதிவாணன்,

செயலர் P3

P. நடராஜன்

செயலர் P4

S.செல்வன்

செயலர் AIG D SU

சிவகங்கை DN


உணர்வடையுங்கள்...! அல்லது உடைக்கப்படுவீர்கள்...!

 

உணர்வடையுங்கள்...
அல்லது உடைக்கப்படுவீர்கள்...

அறைகூவல் என்றொரு வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்...

என் வீட்டில் விசேஷம் கண்டிப்பாக வந்துவிடுங்கள் என்று ஒவ்வொருவருக்காய் தனித்தனியே தாம்பாளத்தில் பத்திரிகை வைத்து அழைப்பதல்ல அது... 

ஒரு காகம் கரைந்ததும் அடுத்த சில நிமிடங்களில் ஒரு கூட்டம் காகங்கள் ஒன்று சேர்ந்திருக்கும். நம் கூட்டத்தில் ஒரு காகத்திற்கு ஆபத்து அனைவரும் வாருங்கள் என்ற ஒற்றை அறைகூவலில் சேர்ந்ததே அந்த கூட்டம்.

தொழில்நுட்பம் இல்லாத அந்த காலங்களிலே அஞ்சல் அட்டையில் விடப்பட்ட  போராட்ட அறைகூவல் கிடைக்கப்பெற்று குறித்த நாளில் குறித்த இடத்தில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தனர்  நம் தொழிற்சங்க முன்னோடிகள். 

இன்றோ தொழில்நுட்பம் கற்பனைக்கெட்டா அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. வாட்சப் நம் வாழ்வின் அங்கமாய் போனது. அரசு இயந்திரமே அதில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஒரே நொடியில் ஒரு பெரும் கூட்டத்திற்கே  தகவல்களை கடத்தும் வல்லமை பெற்றது இந்த வாட்சாப்பும் அதன் தொழில்நுட்பமும். காலமாற்றத்தில் நாமும் இந்த வாட்சாப் பெருங்கடலில் நீந்தியாகவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டோம்.

டஜன் கணக்கில் வாட்சாப் குழுக்கள் இருந்ததால்  தொழிற்சங்கத்திற்கு ஓர் பிரச்சனை... தோழர்களே போரட்டத்திற்கு வாருங்கள் என்று கோட்டச்செயலரால் விடுக்கப்பட்ட  அறைகூவல் நம் காதுகளை எட்டாமல் போயிருக்கலாம். 

குழுவில் தானே தகவல் சொன்னார்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லையே, பின் நான் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நம் ஈகோ நம்மை உணர்த்தியிருக்கலாம்.

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே, அப்புறம் நான் எதுக்கு தேவை இல்லாம நிர்வாகத்துக்கு எதிரா போராடனும் என்று நம் ஆழ்மனம் நம்மை நியாப்படுத்தியிருக்கலாம்.

நம்ம அலுவலகத்தில் இரண்டு வாசல் இருக்குறது எவ்வளவு நல்லதா போச்சு, அந்த பக்கம் போராட்டம்/ஆர்ப்பாட்டம் நடந்தா நாம இந்தப்பக்கமா போய்டலாம் என்று நமக்குள் இருந்த ஏழாம் அறிவு வேலை செய்திருந்திருக்கலாம்.

வெளிய போனா நம்மளையும் கூட்டத்துல நிக்க வச்சிருவாங்க, அவங்க போனதுக்கப்புறம் வெளிய போகலாம்.. அதுவரைக்கும் ஏதாவது வேலையை பாப்போம்..  அந்த  பெண்டிங் வேலையை பார்ப்போம் என்று நமக்குள் இருந்த கடமையுணர்சி கரைபுரண்டோடியிருக்கலாம்.

எது எப்படியோ நேற்றைய ஆர்ப்பாட்டம் முடந்து விட்டது.. அடுத்த ஆர்ப்பாட்டம் நடக்கும் போது பார்துக்கொள்ளலாம். ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் கிடைக்கும் போது அதை தவிர்த்து செல்ல நமக்கு காரணம் கிடைக்காதா என்ன?

பட்டயப்படிப்பு பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு என்று மெத்தப்படித்த நாம்,  பாலர் பள்ளியில் படித்த "சிங்கமும் நான்கு எருதுகளும்" கதையை மீண்டுமொருமுறை படிப்பது நலமென்று நினைக்கிறேன்.

எழுத்தர் பிரிவின் 90 சதவிகித உறுப்பினர்கள் எங்கள் பக்கம்... எண்ணிக்கையை கேட்க பெருமையாய் இருந்தது‌. 
ஆனால் என்ன, ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று சொன்னால் சொச்சம் பேருக்கு இன்குலாப் சிந்தாபாத், மிச்சம் பேருக்கோ சொந்த காரியம் சிந்தாபாத். 

நான் என்பது தன்னம்பிக்கை..
நாம் (தொழிற்சங்கம்) என்பது தலைக்கவசம்.

வேலை என்ற பயணத்தில் தன்னம்பிக்கையோடே பயணிக்கையில் தடைக்கற்களால் நிர்வாகம் நம்மை தடம்புரள வைக்கும். 
நிலைகுலைந்து வீழும்போது தலைக்கவசம் நம்மை காத்து நிற்கும்...

தொழிற்சங்க உணர்வு நமக்கு வருவது எப்போது...

ராஜவிசுவாசிகளாயினும்
சிறிதேனும் தொழிற்சங்க உணர்வோடிருப்போம்

உணர்வடைவோம். அல்லது பிரித்தாளும் சூழ்ச்சிகளால் உடைக்கப்படுவோம்.


NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

 NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை தலைமை அஞ்சலகம் அருகில் இன்று 01.05.2023 அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-அஞ்சல் நான்கு, மற்றும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது!


மே 01, 2023

மேதின வாழ்ததுக்கள்-2023

   


 பொய்ப் புகார் அடிப்படையில் அற்பக் காரணங்களை சொல்லி பறிக்கப்பட்ட  மாபெரும் அமைப்பான  NFPE சம்மேளனத்தின் மற்றும்  AIPEU Group C சங்கத்தின் அங்கீகாரத்தை தொடர் போராட்டத்தின் மூலம்  திரும்பப் பெற இன்றைய மேதினத்தில் சபதமேற்போம்.


அனைத்து தோழமைகளுக்கும் மேதின நல்வாழ்த்துக்கள்!


சிவகங்கை கோட்டத்தில் பல்வேறு அலுவலகங்களில் நடைபெற்ற மேதின கொடியேற்று நிகழ்வின் புகைப்படங்கள்!

சிவவகங்கை HO
மானாமதுரை HO


திருப்பத்தூர் SOகல்லல் SO


மதகுபட்டி SOதிருப்புவனம் SO