தினத்தந்தி -செவ்வாய்கிழமை, மார்ச் 19, 2013
அதிக பணவீக்கம், ஆதாயம் குறைவால் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு குறைந்தது
கொல்கத்தா
அதிக பணவீக்கம் மற்றும் ஆதாயம் குறைவால் அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் பொதுமக்களின் முதலீடு குறைந்துள்ளது.
சேமிப்பு குறைவு
பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்றில், அஞ்சலக சேமிப்புக் கணக்கில் பொதுமக்கள் செய்துள்ள முதலீடு, டிசம்பர் 2012 வரையிலான ஓராண்டு காலத்தில் 1.5 சதவீதம் குறைந்து ரூ.6.02 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக துறையின் மாதாந்திர சேமிப்பு கணக்கில் பொதுமக்கள் எப்போதும் அதிக ஆர்வம் காட்டுவர். ஆனால், மாதாந்திர சேமிப்பு கணக்குகளிலும் முதலீடு 4 சதவீதம் குறைந்து ரூ.2.02 லட்சம் கோடியாக குறைந்தது.
பணவீக்கம்
''பொதுவாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் மாற்று நிறுவனங்களிலேயே முதலீடு செய்ய விரும்புவர். இந்த வகையில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அதிக வருவாய் திட்டங்களை அறிவித்து, முதலீட்டாளர்களை கவருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாகவே அஞ்சலக சேமிப்பில் முதலீடு செய்வது குறைகிறது'' என்று ஜம்மு–காஷ்மீர் மாநில மூத்த அஞ்சலக அதிகாரி ஜான் சாமுவேல் தெரிவித்தார்.
2011–12–ஆம் நிதி ஆண்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் 9 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக, மக்கள் தங்கள் வருவாயில் உணவுப் பொருள்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கே மிகவும் சிரமப்பட்டார்கள். இந்த நிலையில், அவர்களால் சேமிப்பு பணம் ஒதுக்குவது என்பது இயலாததாக அமைந்து விட்ட காரணத்தால், சேமிப்பு குறைந்தது.
பொருளாதார வளர்ச்சியின் ஒரு பங்காக மக்களின் சேமிப்பும் அடங்கும். இதன் அங்கமாக பொது மற்றும் தனியார் சேமிப்பு வெகுவாக குறைந்தது. மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2010–11–ஆம் நிதி ஆண்டில் 36.8 சதவீதமாக இருந்த சேமிப்பு விகிதம் 2011–12–ஆம் நிதி ஆண்டில் 35 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேமிப்பின் அளவு 34 சதவீதத்திலிருந்து 30.8 சதவீதமாக குறைந்தது.
வங்கித் துறையில் களமிறங்கும்
அஞ்சலகத் துறையின் நிதி சேவை கொள்கைகளை மாற்றி அமைப்பதன் வாயிலாக சரிந்து வரும் அஞ்சலக சேமிப்பு விகிதத்தை தடுக்கலாம் என்று சாமுவேல் கூறியுள்ளார். இனி அனைத்து அஞ்சலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த கணினி சேவையை அளிக்க தயாராகி வருகிறது. மேலும், வங்கிச் சேவையில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது.
நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக