மே 02, 2023

உணர்வடையுங்கள்...! அல்லது உடைக்கப்படுவீர்கள்...!

 

உணர்வடையுங்கள்...
அல்லது உடைக்கப்படுவீர்கள்...

அறைகூவல் என்றொரு வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்...

என் வீட்டில் விசேஷம் கண்டிப்பாக வந்துவிடுங்கள் என்று ஒவ்வொருவருக்காய் தனித்தனியே தாம்பாளத்தில் பத்திரிகை வைத்து அழைப்பதல்ல அது... 

ஒரு காகம் கரைந்ததும் அடுத்த சில நிமிடங்களில் ஒரு கூட்டம் காகங்கள் ஒன்று சேர்ந்திருக்கும். நம் கூட்டத்தில் ஒரு காகத்திற்கு ஆபத்து அனைவரும் வாருங்கள் என்ற ஒற்றை அறைகூவலில் சேர்ந்ததே அந்த கூட்டம்.

தொழில்நுட்பம் இல்லாத அந்த காலங்களிலே அஞ்சல் அட்டையில் விடப்பட்ட  போராட்ட அறைகூவல் கிடைக்கப்பெற்று குறித்த நாளில் குறித்த இடத்தில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தனர்  நம் தொழிற்சங்க முன்னோடிகள். 

இன்றோ தொழில்நுட்பம் கற்பனைக்கெட்டா அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. வாட்சப் நம் வாழ்வின் அங்கமாய் போனது. அரசு இயந்திரமே அதில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஒரே நொடியில் ஒரு பெரும் கூட்டத்திற்கே  தகவல்களை கடத்தும் வல்லமை பெற்றது இந்த வாட்சாப்பும் அதன் தொழில்நுட்பமும். காலமாற்றத்தில் நாமும் இந்த வாட்சாப் பெருங்கடலில் நீந்தியாகவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டோம்.

டஜன் கணக்கில் வாட்சாப் குழுக்கள் இருந்ததால்  தொழிற்சங்கத்திற்கு ஓர் பிரச்சனை... தோழர்களே போரட்டத்திற்கு வாருங்கள் என்று கோட்டச்செயலரால் விடுக்கப்பட்ட  அறைகூவல் நம் காதுகளை எட்டாமல் போயிருக்கலாம். 

குழுவில் தானே தகவல் சொன்னார்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லையே, பின் நான் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நம் ஈகோ நம்மை உணர்த்தியிருக்கலாம்.

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே, அப்புறம் நான் எதுக்கு தேவை இல்லாம நிர்வாகத்துக்கு எதிரா போராடனும் என்று நம் ஆழ்மனம் நம்மை நியாப்படுத்தியிருக்கலாம்.

நம்ம அலுவலகத்தில் இரண்டு வாசல் இருக்குறது எவ்வளவு நல்லதா போச்சு, அந்த பக்கம் போராட்டம்/ஆர்ப்பாட்டம் நடந்தா நாம இந்தப்பக்கமா போய்டலாம் என்று நமக்குள் இருந்த ஏழாம் அறிவு வேலை செய்திருந்திருக்கலாம்.

வெளிய போனா நம்மளையும் கூட்டத்துல நிக்க வச்சிருவாங்க, அவங்க போனதுக்கப்புறம் வெளிய போகலாம்.. அதுவரைக்கும் ஏதாவது வேலையை பாப்போம்..  அந்த  பெண்டிங் வேலையை பார்ப்போம் என்று நமக்குள் இருந்த கடமையுணர்சி கரைபுரண்டோடியிருக்கலாம்.

எது எப்படியோ நேற்றைய ஆர்ப்பாட்டம் முடந்து விட்டது.. அடுத்த ஆர்ப்பாட்டம் நடக்கும் போது பார்துக்கொள்ளலாம். ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் கிடைக்கும் போது அதை தவிர்த்து செல்ல நமக்கு காரணம் கிடைக்காதா என்ன?

பட்டயப்படிப்பு பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு என்று மெத்தப்படித்த நாம்,  பாலர் பள்ளியில் படித்த "சிங்கமும் நான்கு எருதுகளும்" கதையை மீண்டுமொருமுறை படிப்பது நலமென்று நினைக்கிறேன்.

எழுத்தர் பிரிவின் 90 சதவிகித உறுப்பினர்கள் எங்கள் பக்கம்... எண்ணிக்கையை கேட்க பெருமையாய் இருந்தது‌. 
ஆனால் என்ன, ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று சொன்னால் சொச்சம் பேருக்கு இன்குலாப் சிந்தாபாத், மிச்சம் பேருக்கோ சொந்த காரியம் சிந்தாபாத். 

நான் என்பது தன்னம்பிக்கை..
நாம் (தொழிற்சங்கம்) என்பது தலைக்கவசம்.

வேலை என்ற பயணத்தில் தன்னம்பிக்கையோடே பயணிக்கையில் தடைக்கற்களால் நிர்வாகம் நம்மை தடம்புரள வைக்கும். 
நிலைகுலைந்து வீழும்போது தலைக்கவசம் நம்மை காத்து நிற்கும்...

தொழிற்சங்க உணர்வு நமக்கு வருவது எப்போது...

ராஜவிசுவாசிகளாயினும்
சிறிதேனும் தொழிற்சங்க உணர்வோடிருப்போம்

உணர்வடைவோம். அல்லது பிரித்தாளும் சூழ்ச்சிகளால் உடைக்கப்படுவோம்.


கருத்துகள் இல்லை: