இன்று ( 08.07.2018) தோழர் டி.ஞானையா அவர்களுக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி தினம்
அவர் பற்றி இந்த நினைவு அஞ்சலி குறிப்பை எழுதியவர் தோழர் கே.இராமச்சந்திரன் .அரசரடி தலைமை அஞ்சலகத்தில் APM(Accounts) ஆக பணி நிறைவு செய்தார்.தோழர் டி. ஞானையா அவர்களால் தொழிற்சங்க காந்தி என அன்புடன் அழைக்கப்பட்டவர். இராமநாதபுரம் , சிவகங்கை கோட்டங்களில் சிறந்த தொழிற்சங்கவாதிகள் பலரை உருவாக்கியவர். இப்போது மதுரையில் வசித்து வருகிறார். அஞ்சல் RMS பகுதி மதுரை மண்டலத்தின் அஞ்சல் ஓயவூதியர் சங்கத்தின் தலைவராக பணி செய்கிறார்.
தோழர் D. ஞானையா தோற்றம் :07.01.1921, மறைவு : 08.07.2017 . இன்று ( 08.07.2018) அவருக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி தினம்-
இந்திய தபால் தந்தி ஊழியர் தொழிற்சங்க வரலாற்றில் சிறப்பான முத்திரை பதித்த முன்னணித் தலைவர் தோழர் D. ஞானையா அவர்கள் தனது 97வது வயதில் 08.7.2017 அன்று கோவையில் காலமானார்.
இன்று ( 08.07.2018 )அவருக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி தினமாகும்
தோழர் டி.ஜி ஒரு பன்முகத் திறமையாளர்.
தொட்ட துறைகளிலெல்லாம் உச்சத்தை அடைந்தவர். தமிழ்,
ஆங்கிலம், இந்தி மொழிகளில் சிறந்த பேச்சாற்றல் மிக்கவர். அரசியலில் முன்னிலைத்தலைவர். மிகச்சிறந்த சிந்தனையாளர்,
வரலாற்று ஆசிரியர், முற்போக்கு எழுத்தாளர்.
தொழிற்சங்கத்தில் அவரின் பங்கு.
தோழர் D. ஞானையா அவர்கள் ஒன்றுபட்ட தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றிவர். 1950ல் தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவை உள்ளடக்கிய யூனியன் ஆப் போஸ்ட்ஸ் அண்ட் டெலிகிராப்ஸ் ஒர்க்கர்ஸ் (UPTW) சங்கத்தின் மாநில துணை செயலாளராக பணியாற்றினார்.
NFPTE ன் திருச்சி மாவட்டத்தில் செயலாளராக, அதன் தலைவராக, மாநில அமைப்புச் செயலாளராக, மாநில தலைவராக,அகில இந்திய துணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
1960ம் ஆண்டு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.
1960ம் ஆண்டு ஜீலையில் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை திருச்சியில் தலைமையேற்று நடத்தினார். அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு அவசர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவித்த போதும் இலாகா மீண்டும் அவரை பணி இடை நீக்கம் செய்து விசாரணை நடத்தியது. விசாரணை திருச்சியில் இல்லாமல் புதுக்கோட்டையில் போலீஸ் காவலுடன் நடத்தப்பட்டது. இவர் வேலை நிறுத்தத்தினை தலைமையேற்று நடத்தியதை ஒப்புக்கொண்டார். இலாகா இறுதியில் இவரை பணி நீக்கம் (Dismissal) செய்தது. 14 மாதங்கள் கழித்து மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
1968 செப்டம்பர் 19 அன்று மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தம்.
1963ல் ஒன்றுபட்ட NFPTE சம்மேளனத்தின் செயலாளராகவும், 1965 முதல் 1970 வரை சம்மேளன மாபொதுச் செயலாளராகவும் (Secretary General) பணியாற்றினார். 1966ம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டு ஆலோசணைக் குழு (JCM) அமைந்திட அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அந்த அமைப்பினை ஒரு அர்த்தமுள்ள அமைப்பாக உருவாக்கிட உதவினார். அந்த அமைப்பின் விதிகளை மீறி அரசு உடன்பாடு ஏற்படாத பிரச்சனைகளை நடுவர் மன்றத்தின் தீர்ப்பிற்கு எடுத்துச்செல்ல மறுத்ததால் 1968 செப்டம்பர் 19 அன்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது. தபால் தந்தி ஊழியர்களின் ஒன்றுபட்ட NFPTEசம்மேளனத்தின் செக்ரட்டரி ஜெனரலாக இருந்த மோழர் டி. ஞானையா அவர்கள் தபால் தந்தி பகுதியில் போராட்டத்தினை தலைமையேற்று நடத்தினார். முந்தைய நாள் இரவு கைது செய்யப்பட்டு டெல்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தபால் தந்தி பகுதியில் போராட்டம் முழு வெற்றி அடைந்தது.
பழிவாங்குதல் அதிகமாக இருந்தது. சம்மேளன அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
விதிப்படி வேலை மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின்மூலம் பழிவாங்குதல்,
சம்மேளன அங்கீகார ரத்து போன்றவற்றை துடைத்து இயல்பு நிலைக்கு தபால், தந்தி பகுதியினை கொணர்ந்தார்.
சோதனைகளும் சாதனைகளும்
NFPTE சங்கத்தில் 1971 முதல்1975 வரை இரு அணியாக இருந்த பிளவு நீங்கி 1976 ல் மீண்டும் ஒன்றுபட்ட நிலையில் NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக பம்பாயில் INTUC தலைவர் திரு. N.K. பட் அவர்கள் தலைமையில் கூடிய சம்மேளன குழுவில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரம். ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இவரை செயல்பட விடாமல் அரசு பல்வேறு தாக்குதல்களை இவர் மீது தொடுத்தது. CL உட்பட அனைத்து விடுமுறைகளும் அவருக்கு மறுக்கப்பபட்டன. ஒரு நாள் CL கொடுத்த கோவை HO. அஞ்சல் அதிகாரி இரவோடு இரவாக மாற்றப்பட்டார். ஏற்றுக்கொண்ட பொறுப்பினை செம்மையாக செயலாற்றிட வேறு வழியின்றி இவர் விருப்ப ஓய்விற்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டு (Leave preparatory to retirement)ல் ஓய்விற்கு முந்தைய விடுமுறையில் சென்று சங்கபணியாற்றினார். இந்த காலகட்டத்தில் இவரை ஆசிரியாராக கொண்டு வெளிவந்த NFPTE சம்மேளனத்தின் சங்க ஏடு “ The P&T Labour “ அரசால் கைப்பற்றப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.
1977ல் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி காரணமாக ஜனதா அரசு பதவிக்கு வந்தது. இயல்பு நிலை திரும்பியது. அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த திரு. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்கள் இவரது விருப்ப ஓய்வினை இரத்து செய்து பணியில் தொடர அனுமதித்தார். தபால் தந்தி ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் பெறப்பட்டது. JCM ஊழியர் தரப்பு தலைவராக இருந்த தோழர் டி. ஞானையா அவர்களும் அரசு தரப்பில் மெம்பர் PO ஆக இருந்த திரு. ஏ. சுவாமிநாதன் அவர்களும் போனஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 1978 வரை இவர் தொடர்ந்து சம்மேளன பொதுச்செயலாளராக இருந்து பல்வேறு சாதனைகளை புரிந்தார். 1979 ஜனவரியில் இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தோழர் ஞானையா சம்மேளன பொறுப்பில் இருந்த காலத்தில் அனைத்து கருத்தோட்டம் கொண்ட தலைவர்களையும் ஊழியர்களையும் இணைத்து ஒருமித்த கருத்தினை உருவாக்கி அதன் அடிப்படையிலேயே செயலாற்றினார் என்பது இவரது தனிச்சிறப்பு. ஓய்விற்கு பின்பும் இவர் 2006ம் ஆண்டு வரை ஊழியர் தரப்பு பிரதிநிதியாக நடுவர் தீர்ப்பு வாரியத்தில் (Board of arbitration) 8 ஆண்டுகள் பணியாற்றினார். சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தகாலகட்டங்களில் வெவ்வேறு நாட்டு தொழிற்சங்க அமைப்புகளின் அழைப்பின் பேரில் அந்த நாடுகளுக்கு பயணித்து சர்வதேச அரங்குகளில் உரையாற்றியும், தலைமை பாத்திரம் ஏற்றும் தபால் தந்தி ஊழியர்களுக்கு பெருமை சேர்த்தார். பணியில் இருந்த காலத்தில் இவர் மூன்று முறை கைது செய்யப்பட்டும், மூன்று முறை பணி இடை நீக்கம் செய்யப்பட்டும், ஒரு முறை பணி நீக்கமும், ஒரு முறை கட்டாய விருப்ப ஓய்விலும் அனுப்பப்பட்டுள்ளார் என்பது இவரது உறுதியான தொழிற்சங்க தலைமைக்கு எடுத்துக்காட்டாகும்.
அரசியல் பணி.
ஓய்விற்கு பின்பு இவர் முழு நேர அரசியல் பணியாற்றினார். இவர் சார்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக எட்டு ஆண்டுகளும், நிர்வாக குழு உறுப்பினராக 25 ஆண்டுகளும்,மாநில கட்டுப்பாட்டு குழு தலைவராக10 ஆண்டுகளும், மத்தியில் தேசிய குழு உறுப்பினராக 10 ஆண்டுகளும் இருந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார். இந்த காலகட்டத்தில் இவர் பல்வேறு விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று பல முடிவுகளுக்கு காரணியாக செயல்பட்டுள்ளார். இவரை தெரியாத, இவருக்கு தெரியாத அரசியல் தலைவர்கள் மிகவும் குறைவு.
எழுத்துப்பணி.
அரசியல் பயணத்தை தொடர்ந்து எழுத்துப் பணியில் கவனத்தை செலுத்தினார். உலகின் பல மூலைகளிலிருந்தும் அரிய வகை நூல்கள் பலவற்றை தருவித்தும் உலகின் புகழ் மிக்க நூலகங்கள் பலவற்றிற்கு நேரடியாக சென்று கற்றும், ஆய்ந்தும் பல்வேறு நூல்களை வெவ்வேறு பொருள்களில் எழுதியுள்ளார். அவர் நூல்களில் உலகில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி ஆழமாக விவாதித்துள்ளார். அதற்கு தீர்வுகளும் தந்துள்ளார். மார்க்சிய சித்தாந்தம், உலக வரலாற்று போக்கு பற்றிய இவரது புரிதலும், வியாக்கியானங்களும் கற்றோர் உலகில் பெரும் வியப்பினையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இதுவரை 30க்கும் மேற்பட்ட புத்தகங்களும், சிறு பிரசுரங்களும்,நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவர் எழுதி இவர் மறையும் சில நாட்களுக்கு முன்பாக சர்வதேச பப்ளிஷர்களால் வெளியிடப்பட்ட சுமார் 800 பக்கங்கள் கொண்ட ஆங்கில நூல் “An Alternative History of India” என்பதாகும். கடைசியாக எழுதிக்கொண்டிருந்த கம்யூனிச இயக்க வரலாறு என்ற நூல் முற்றுப்பெறாமல் உள்ளது. பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர் திருமிகு.V.Rகிருஷ்ணய்யர் அவர்கள் சுமார் 400பக்கங்கள் கொண்ட இவரது “Terrorisms, Sources & Solutions” நூலை முழுமையாக படித்து விட்டு எழுதிய அணிந்துரையில்‘திரு.ஞானையாவின் நூலைப் படிக்காமல் நீங்கள் உலகத்தை முழுமையாக அறிந்துகொள்ளவே இயலாது” என்று குறிப்பிடுகின்றார். இது ஒன்றே தோழர் டி. ஞானையா அவர்களது ஆய்வாற்றாலை எடுத்துக்காட்ட போதுமானது. இவரது மற்றொரு படைப்பான “Obama’s of America and Dalits of India”(Saga of Two Black Peoples) நூலுக்கு அயோத்திதாசர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மாமனிதருக்கு நமது வீர வணக்கமும்,
அஞ்சலியும்.
இவரது ஆழ்ந்த சிந்தனை,நுண்ணிய அறிவாற்றல், அபாரமான நினைவாற்றல்,
வியத்தகு மனித நேயப்பண்பு, விவாதம் மற்றும்ஆய்வுத் திறன் போன்றவற்றில் இவருக்கு சமமானவர்கள் ஒரு சிலரே இருக்கக்கூடும்.
இத்துணை ஆற்றல் பெற்ற தலைவர் தோழர் டி. ஞானையா,அரசியல் உச்சபட்ச தலைவர்கள்,தொழிற்சங்க பிரபலங்கள் அனைவரிடமும் நேரடியான தொடர்பும், நட்பும் கொண்டிருந்த போதும், தொண்டர்களிடமும் அதே அளவு அன்பும், பாசமும் காட்டி பயணித்தே வந்தார். இது மிகவும் போற்றத்தக்க பண்பாகும். இத்தகு பன்முகத்தன்மை கொண்ட மாமனிதர் தனது 97வது வயதில் காலமானர் என்ற போதும் அவரது மறைவினை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அம் மாமனிதருக்கு நமது வீர வணக்கத்தையும்,அஞ்சலியினையும் தெரிவிப்பதோடு,அவர் நினைவைப் போற்றிடுவோம்.
RED SALUTE COM. D. GNANIAH
இவண்
கே, இராமச்சந்திரன், Postal Pensioners Association, மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக