ஜூலை 15, 2017

தோழர் டி ஞானையாவின் மறைவையொட்டி ஒரு மனம் திறந்த ஒரு மடல்.



தோழர் டி ஞானையா Ex- Secretary General, NFPTE
தோற்றம் : 07.01.1921
மறைவு :     08.07.2017 
தோழர்  டி  ஞானையாவின் மறைவையொட்டி ஒரு மனம்  திறந்த  ஒரு மடல்

சிவகங்கை கோட்டத்தின் பாசமிகு இளைய தோழர்களே!  தோழியரே!

 கடந்த  ஒரு வாரமாக எனக்குள் ஒரு மன அழுத்தம்.இன்று என்னுடைய 58 வயதில், மாரடைப்பால்   ஏற்பட்ட எனது 51 வயது தந்தையின் இறப்பிற்கு பின், தோழர் ஞானையாவின்  இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாய் என்னைப் பாதித்துள்ளது

எனது 21 வயதில் இருந்து நேற்றுவரை என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர் அவர்.அவருடைய கட்சியால் அல்ல. அவருடைய  எழுத்தால் அல்ல. அவருடைய பேச்சால் அல்ல.
எல்லோரையும் சமமான சகமனிதர்களாக கருதி இந்த மனித குலம் உய்வதற்கு இறுதி மூச்சு வரை தன்னை அர்ப்பணித்துக் கொண்டாரே. அந்த  ஒன்று தான். தனது கருத்துக்களை  ஜாதி மதம் இவற்றை தாண்டி மிகத் துணிச்சலாக  உலகம் முழுக்க புத்தகங்களாக நேற்றுவரை கொண்டு சென்றுள்ளார். 

அதைப்போலவே தனது சுய வாழ்வில் இறுதி வரை எடுத்து காட்டாய் வாழ்ந்தார்.1921ல் பிறந்து 1941ல் அஞ்சல் துறையில் சேர்ந்து  2017 ல் அமரத்துவம் அடையும் வரை ஓரு சகாப்தமாய் இருந்துள்ளார். அவர் கற்றுக் கொடுத்தது அதிகம். முழவதும் பின்பற்ற முடியாமல் முயன்று முயன்று தொடர்ந்து  தோற்றுக் கொண்டிருக்கிறேன். 

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது உண்மையே. அதனால்தான் கம்பனும் நல்லது செய்வதற்காகவே அவதரித்த கடவுளை விட, கடவுள் மானிட  அவதாரம் எடுத்து நல்லது செய்ததுதான் மிகப்பெருஞ்செயல் என்று மானுடம் வென்றதம்மா என்றான்.

தோழர் ஞானையாவிற்கு நமது கோட்டத்தின் மீது தனிப்பற்று என்பதைவிட வாஞ்சை என்றே சொல்ல லாம்.  அதனால் தான் கோவையை விட்டு வெளியே வந்து கலந்து கொண்ட இறுதிக் கூட்டம்  சிவகங்கையில் சங்கத்தின்  வைரவிழா கூட்டம்.

1981ல் இருந்து நமது கோட்டத்தில் தொடரும் செயல்பாடுகளில் வெளிப்படும் மானுட வாஞ்சை அவரை மிகவும் ஈர்த்த ஒன்று.அதனால் தோழர்களே! சகமனிதர்களையும் சமமாய் பாவிப்போம். எதிரே இருப்பவரிடம் என்னிடம் இல்லாத  ஒன்று இருப்பதாய் கருதி அதையும்  அறிய முயல்வோம்.நாம் அறிந்தவற்றை பிறர் அறியத் தருவோம். அருகில் இருப்பவர் வாடி இருந்தால் வாட்டம் போக்க முயல்வோம்.துயரத்தையும் மகிழ்ச்சியையும் பக்குவமாய் பகிர்ந்து கொள்வோம்.

மிக  அற்புதமான போற்றுதற்குரிய சேவை அஞ்சல் சேவை. அந்த வாய்ப்பு நம்மைப் போல் அனைவருக்கும் கிட்டவில்லை. வாழ்வின் அனைத்து நிலைகளிலும்  உள்ளவர்களுக்கு நாம் வழங்கும் அரிய சேவை. நமது ஊதியம் கோரிக்கை போராட்டம் என  அவை ஒரு புறம் இருக்கட்டும். 

அலைபேசிக்குள்ளே எப்போதும் மூழ்கிப்போகும்  நாம் ,எதிரே இரத்தமும் சதையுமாக நிற்கும் மனிதனையும் நினைப்போம். புத்தகங்கள் நிறைய படியுங்கள்.  மனதை ஒருமுகப்படுத்தல் தியானம் என்றால் கவனம் முழுவதும் ஈர்க்கும் வாசித்தலும் தியானமே. 

கற்போம்! அறிவோம்!  அறிந்ததை அறியத்தருவோம் ! மானுட வாழ்வை மறைவிற்கு முன் மாட்சிமையாய் வாழ முயற்சிப்போம்.

தோழர்களே! தோழியரே! 
நீங்கள் தொடர்வதாய்  எண்ணி நான் பதிவிடும் வீரம் விளைந்த நிலம் தொடர் மீண்டும் தொடரும் 

கா.செல்வராஜ்  முன்னாள் செயலர் P3,

கருத்துகள் இல்லை: