ஜூலை 14, 2017

தோழர் ஞானையா விடம் கறார் தன்மையும் நெறிப்படுத்தலும் எப்போதும் விஞ்சி நிற்கும்.

தோழர் ஞானையா விடம் கறார் தன்மையும் நெறிப்படுத்தலும் எப்போதும் விஞ்சி நிற்கும். 

கல்வி மைய மாவட்டச்செயலராய் அவர் பொறுப்பில் நீண்ட காலம் இருந்த போது மாதக்கட்டனம் நன்கொடை தேர்தல் நிதி போன்றவற்றில் யாரும் எந்த பாக்கி வைக்க முடியாது. நினைவூட்டும் பொருட்டு சளைக்காமல்  அஞ்சல் அட்டை அவரிடம் இருந்து வரும். கறார் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியது அவராகத்தான் இருக்கும். 

அது போலவே நெறிப்படுத்த லிலும் அவரது பாணி அலாதியானது. 

ஒருமுறை ஒரு செயற்குழு கூட்டத்தில் மாநிலப் பொறுப்பில் இருந்த மிகவும் மூத்த தோழர் ஒருவர் நான் வெளிநடப்பு செய்கிறேன் என்றதற்கு அவர் கொடுத்த பதிலும் விளக்கமும் என்னை மிரள வைத்தது.  அவர் அப்படி பேசியதை அதுவரை நான் கண்டதில்லை. 

சோர்ந்து போன  அஞ்சல் அரங்கில் துளிர் விடுதல் போல் ஏதேனும் நடந்தால் அதை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வந்து பாராட்டவும் தவறியதில்லை. இந்த  அரிய பண்பு தோழர் ஜெகனிடமும் வெளிப்பட கண்டுள்ளேன். 


கே.செல்வராஜ் முன்னாள் செயலர் P3




நினைவாற்றல் மிக்க தோழர் ஞானையா.

நடந்த நிகழ்வுகளை நாட்களோடும் ஆட்களோடும் தன் இறுதிநாள் வரை நினைவு கூர்ந்தது தோழரைப்போல யாரும் இருக்க வாய்ப்பில்லை. 

நாடு விடுதலை அடைவதற்கு முன்பு 1941ல்
பணியில் சேர்ந்ததில் இருந்து இன்றுவரை நடந்த  அத்துனை நிகழ்வுகளையும் கேட்போரின் ஆர்வம் மேலிட  அவர் பகிர்ந்து 
நாங்கள் கேட்டதுண்டு. 

இப்படித்தான் கடந்த ஆண்டு கோவையில் நடந்த அஞ்சல் ஓய்வூதியர் 
மாநாட்டில் தோழர் ஞானையா சிறப்புரையாற்றிய பின்னர்  அவரை நோக்கி 88 வயதுள்ள  ஒரு முதிர்ந்த தோழர் பழைய நினைவுகளுடன் மேடைக்கு வருகிறார்.

அவரைப்பார்த்த  அடுத்த நிமிடமே என்ன தோழர் ஆனந்தம் முதலியார் எப்படி இருக்கீங்க என்று வினவ  அவருக்கோ மிகுந்த வியப்பு. இவர் ஓய்வு பெற்றே 30 ஆண்டுகள் கழிந்த நிலையில் தோழர் அவரை அடையாளம் கண்டது அருகில் இருந்தவர்களையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. 

அவர் தான் தோழர் ஆனந்தம் முதலியார். தோழர் ஞானையா அகில இந்திய பொறுப்பு களில் இருந்த போது இவர் அஞ்சல் நான்கில் அகில  இந்திய  அமைப்புச் செயலராய் பணியாற்றியிருக்கிறார்.

தற்போது ஓய்விற்கு பின் நாகர்கோவிலில் வசிக்கும் இந்த தோழர் ஓய்வூதியர் அமைப்பிலும் பங்கெடுத்து வருகிறார்.

.......கே.செல்வராஜ் முன்னாள் செயலர் P3




மரியாதைக்குரிய திரு சுப்பாராவ் மதுரை அஞ்சல் கோட்டத்திலிருந்து பணிஓய்வு பெற்றவர். முகவை கோட்டத்தில் தொழிற்சங்க பொறுப்பாளராக செயல்பட்டவர் பணிஓய்வுக்கு பின் தாம்பரத்தில் வசிக்கிறார். தலைவர் ஞானையா மறைவு செய்தியை சொன்னேன். தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அனுதாபம் தெரிவித்தார். ராமர் கோயில் தாம்பரம் சேலையூரில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருப்பதால் கோவை செல்ல முடியா சூழலை தெரிவித்தார்.
தோழர் ராமபிரசாத் ஏற்கனவே திட்டமிட்டபடி திரு பிரபாகரன் உடன் கோவை செல்லமுடியவில்லை என்றும் அவசரஅவசியம் காரணத்தால் செல்லமுடியவில்லை  என்று தகவல் சொன்னார்.
தோழர் ஆதி நெல்லையிலிருந்து இன்று இரவு கோவை பயணம்
.............பி.கருப்பையா Office Supervisor(Retired), Chief PMG Office ,Chennai


நீண்ட நெடிய போராட்ட களத்தில் தோழர் ஞானையா வின் முதல் பதிவு.  

1941ல் கரூர் அஞ்சலகத்தில் எழுத்தராக முதன்முறையாக பணியில் சேர்கிறார்.

முதல்நாள் தண்ணீர் அருந்த அலுவலகத்தில் பானையில் இருந்து ஒரு குவளையில் எடுத்து குடித்துவிடுகிறார்.

இதைக்கண்ட சூப்பர்வைசர் இந்த பானையில் இருக்கும் நீர் உன்னைப் போன்றவர்களுக்கு இல்லை. உங்களுக்கென்று தனியாக பானையும் குவளையும் அங்கே இருக்கிறது. இனி இங்கே குடிக்காதே என்று சொல்லி செல்கிறார்.

அடுத்த நாள் மீண்டும் முதல்நாள் குடித்த  அதே பாணையில் குவளையில் எடுத்து அருந்தும்போது அந்த சூப்பர்வைசர் சப்தமிட்டுக்கொண்டே தோழரை நெருங்கும்போது, தோழர்.ஞானையா தலைக்குமேல் தூக்கி  அலுவலகத்திற்குள்ளேயே மடாரென போட்டு உடைக்கிறார். 

இளம் 21 வயதில் அடிமை இந்தியாவில் ஜாதிப் பிரிவினைக்கெதிராக  தனது எதிர்ப்பை தபால் தந்தி துறையில்  இவ்வாறு முதல் பதிவு செய்து போராட்ட களத்தில் தனது நெடிய பயணத்தை துவங்கினார்.

1941க்குபின் இவ்வளவு காலம் கடந்தபின்பும் அந்த இரட்டை பானை முறைபோல  இன்னும் பல பகுதிகளில் இரட்டைக் குவளை முறை வழக்கில் இருப்பது வேதனைக்குரியது.



.......கே.செல்வராஜ் முன்னாள் செயலர் P3

கருத்துகள் இல்லை: