ஜூன் 27, 2013

இந்திய ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சியும் விளைவுகளும்

இந்திய ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சியும்  விளைவுகளும்  குறித்து 27.06.2013 அன்று தினகரன் நாளிதழில் வெளிவந்த தலையங்கம் கீழே தரப்பட்டுள்ளது தரப்பட்டுள்ளது 

ஒரு டாலரும் 60 ரூபாயும்

ரூபாயின் மதிப்பு மோசமாக சரிந்திருக்கிறது.  அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டு ரூபாயை மதிப்பிடுவது மரபு. அதன்படி ஒரு டாலர் இன்று 60 ரூபாய் 42 காசுக்கு சமம்.  நாடு 1947ல் சுதந்திரம் அடைந்தபோது ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அப்போது நமது நாடு யாரிடமும் கடன் பட்டிருக்கவில்லை. அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டி செயல்படுத்த அரசு முனைந்தபோது நிறைய பணம் தேவைப்பட்டது. வெளிநாடுகளிடம் கடன் வாங்கியது. அதற்கு வட்டி கட்ட நேரிட்டது. வரவுக்கும் செலவுக்கும் இடைவெளி அதிகமானது. அதன் விளைவாக ரூபாயின் மதிப்பை குறைக்க நேர்ந்தது. 


அதற்கு முன் பிரிட்டிஷ் காலனியாக இந்தியா இருந்த நேரத்தில் டாலரை காட்டிலும் ரூபாயின் மதிப்பு உயர்வாக இருந்தது. 1917ம் ஆண்டில் டாலரின் மதிப்பு வெறும் 7 பைசா. 1925ல் 10 பைசா ஆனது. 1962ல் சீனாவுடன், 65ல் பாகிஸ்தானுடன் போர் நடந்ததால் செலவுகள் எகிறின. ஆயுதங்கள் வாங்க பெரும் தொகை கடன் வாங்க வேண்டியிருந்தது.

பணவீக்கம் என்ற வார்த்தை அப்போதுதான் பத்திரிகைகளில் புழக்கத்துக்கு வந்தது.  நிதியமைச்சர் கிருஷ்ணமாச்சாரியும் காங்கிரஸ் தலைவர் காமராஜரும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ரூபாய் மதிப்பை குறைத்தார் பிரதமர் இந்திரா காந்தி. டாலர் 7 ரூபாய் ஆனது. எனினும், அதன் பிறகு 1990 வரையிலும் மெதுவாகத்தான் டாலர் மதிப்பு உயர்ந்து வந்தது. அப்போது 17 ரூபாய்க்கு சற்று அதிகம். தாராளமயம் என்ற பேனரின் கீழ் நரசிம்மராவ் , மன்மோகன் கைகோர்த்த பிறகு ரூபாய் மதிப்பு மீண்டும் வெகுவாக குறைக்கப்பட்டது. 

இன்று அரசு இஷ்டப்படி கூட்டுவது குறைப்பது இல்லாமல் சர்வதேச சந்தை நிலவரம் கரன்சி மதிப்பை தீர்மானிக்கிறது. ரிசர்வ் பாங்க் தலையிட்டால் ரூபாயின் வீழ்ச்சியை தடுக்கலாம் என்பது தவறான கருத்து. நமது ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதால் ரூபாய் மதிப்பு ஏற வழியே இல்லை. இனி பணவீக்கம் குதிரையாக பறக்கும். கச்சா எண்ணெய், நிலக்கரி விலை உயரும். அரசுக்கும் மக்களுக்கும் செலவு கூடும்; வருமானம் குறையும். எப்படி பார்த்தாலும் யாருக்குமே இது நல்ல சகுனமாக தெரியவில்லை.


கருத்துகள் இல்லை: