கிராம மக்களும் சத்தான உணவை சாப்பிட தொடங்கியதால் பணவீக்கமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் பேச்சால் சர்ச்சை
பெங்களூர், -
கிராமவாசிகளும் சத்தான உணவை சாப்பிட தொடங்கியது பணவீக்கத்திற்கு காரணம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
நாட்டில் விலைவாசி 'ஜெட்' வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக உணவுப்பொருட்களின் விலைகள் நாளும் ஏறி வருகிறது. இதனால் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரில் நடந்த கர்நாடக தொழில், வர்த்தக சபை நிகழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்த பிரச்சினை குறித்து கூறியதாவது:–உலகளவிலான பொருளாதார நெருக்கடிக்கு முன்பாக நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருந்தது. இதற்கு, உள்நாட்டு சேமிப்புகள் அதிகரித்ததால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஏற்றம் காரணம் ஆகும்.உலக பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து உள்நாட்டு முதலீடுகள் குறைந்து விட்டன. இதனால் ஏற்றுமதியும் குறைந்து இருக்கிறது. உள்நாட்டு தொழில் துறையில் லாபம் சரிவை சந்தித்துள்ளது.
கூலி உயர்வு
2010, 2011 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. 2012–ம் ஆண்டு பண வீக்கம் மிதமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்ததற்கு உணவுப்பொருட்கள் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதே காரணம்.உணவுப்பொருட்கள் விலைதான் ஒட்டுமொத்த பணவீக்கத்துக்கு வழிவகுக்கிறது. வருமான முறையில் ஏற்பட்ட மாற்றம் (அதிக வருவாய் ஈட்டியது), உணவுப்பொருட்கள் வாங்கும் தேவையை அதிகரித்தது. கிராமப்புறங்களில் கூலி வேலைகளுக்கு செல்கிறவர்களின் கூலி ஆண்டுக்கு 20 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சாப்பாடு முறையில் மாற்றம்
இதனால் அவர்கள் சாப்பாட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களும் அரிசி மாவு, சோள மாவு போன்றவற்றை சாப்பிடுவதிலிருந்து புரோட்டீன் போன்ற சத்தான உணவுகளை சாப்பிட தொடங்கி விட்டனர். இவர்கள் கூடுதலாக முட்டை, இறைச்சி, பால், காய்கறிகள், பயறுகள், பழங்கள் ஆகியவற்றை இப்போது சாப்பிடுகின்றனர்.பண வீக்கத்துக்கு உலகளாவிய பொருட்கள்– குறிப்பாக எண்ணெய்ப்பொருட்கள் விலை ஏற்றம் இன்னொரு காரணம் ஆகும். உலகளவில் இந்தியாதான் நான்காவது அதிகபட்ச எண்ணெய் இறக்குமதி நாடாக திகழ்கிறது. எண்ணெய் இறக்குமதி அதிகரித்து வருகிறது. இவற்றுடன் சேர்த்து தங்கத்தின் விலை ஏறி வருவதும் இந்தியாவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சர்ச்சை
பணவீக்கத்துக்கு கிராமப்புற ஏழை மக்களும் முட்டை, பால், இறைச்சி போன்ற சத்தான உணவை கூடுதலாக சாப்பிட ஆரம்பித்ததும் காரணம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக