மே 01, 2025

*தகவல் பலகை (982): 01.05.2025*

*தகவல் பலகை (982): 01.05.2025*
#########################

*ஹே மார்க்கெட்*
*எங்கள் போதி மரம்*

எத்தனை யோகவி எழுதப் பட்டது
மேதின மே உனக்கு- அது
மிகவும் பெரிய கணக்கு!
என்றா லும்உனை நானும் பாட
ஊறுது கவி எனக்கு- நீ
விடியல் ஏந்தும் விளக்கு!

புத்தன் பெற்றது புதியமெய் ஞானம்
போதி மரத்தடியில் - அதன்
பூவிழும் நிழல் மடியில்.
இத்தரை மீதினில் 
உழைப்பவன் ஞானம்
பெற்றது எங்கு எனில் -அது
ஹே மார்க்கெட் வெளியில் !

நான்கு தோழர்கள் நாற்றாய் வீழ்ந்தனர்
ரத்தச் சேற்றினிலே -அந்த
உதிரத்தின் ஊற்றினிலே - இன்று
ஓங்கி வளர்ந்தோம் 
கிளைத்தோம் தழைத்தோம்
உலகம் எங்கிலுமே! - இதை
உணர்த்தும் தினம்தான் மே!

செங்கொடி உலகில் ஜனனம் எடுத்த
திருநாள் இன்றல்லவா?- அந்த
பெருநாள் இன்றல்லவா?
வெங்கொடும் சுரண்டலை 
வீழ்த்தும் உத்வேகம்
பெறும்நாள் இன்றல்லவா? உழைப்போர்
யாவரும் ஒன்றல்லவா?

செங்கொடி யே 
ஓ செங்கொடி யேஉனை
முகர்ந்து பார்க்கையிலே - என் 
மூச்சுக் காற்றினிலே
சிக்காகோவின் ரத்த வாசனை
இன்னும் அடிக்கிறதே- என் 
இதயம் துடிக்கிறதே!

அழுக்காய் கிடந்த மனித குமாரனை
அழகாய் செய்த தினம்- இதில்
ஆயிரம் பூவின் மணம்!
ஆதி மனிதனை ஜோதி மனிதனாய்
ஆக்கிய தியாக தினம்!- ரத்தம்
சிந்திய சிவப்புதினம் !

மண் எனக் கிடந்த மானிடன் தனது
மகத்துவம் அறிந்த தினம் -யுக
மாற்றம் புரிந்த தினம்!
கண்ணினும் இனியது 
உழைப்பெனும் உணர்வுக்கு
கால்கோள் செய்த தினம் -கண்ணீர்
கந்தகம் ஆன தினம்!

காலத்தின் பாதையில் ரத்தச் சுவடுகள்
பதித்த மேதினமே ! -உனை
நினைத்தோ மேதினமே!
கண்ணீர் கேணியில் வீழ்ந்தவ ருக்கு
கைகொடுத்த கரமே -உன்னை
வணங்கும் எம் சிரமே!

செக்கர் வானில் சிவப்பை எடுத்து
குழைத்த சித்திரமே! -எம்
குருதி சொரிந்த களமே!
ஜெகத்தை புதுக்கிய 
செந்தினமே உனை
துதித்தோம் வந்தனமே - நீ
சுடரும் செந்தீபமே!

தோழர்களே இந்த பூமியை இன்னும்
விரைவாய் சுழலவைப்போம்- இன்று
மே நாள் சூள் உரைப்போம்!
மேதினம் ஓதிடும் சேதியை பூமியின்
காதினில் ஓதிடுவோம் - செஞ்
ஜோதியில் மூழ்கிடுவோம்!

*

கருத்துகள் இல்லை: