ஜூலை 14, 2017

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஞானையா உடலுக்குத் தலைவர்கள் அஞ்சலி- தினமணி (14.07.2017)

தினமணி - 14.07.2017

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஞானையா உடலுக்குத் தலைவர்கள் அஞ்சலி

BDIN  |   Published on : 14th July 2017 05:33 AM  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ஞானையாவின் உடலுக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ஞானையா (97) உடல்நலக் குறைவால் கோவையில் ஜூலை 8-ஆம் தேதி காலமானார். அவரது மகள், பேத்திகள் அமெரிக்காவில் இருந்ததால் அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டன.

இதையடுத்து, அவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்ததையடுத்து, கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் டி.ஞானையாவுக்கு இறுதி அஞ்சலி வியாழக்கிழமை நடைபெற்றது.

அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் புரட்சித் தம்பி, மதிமுக தேர்தல் பணிக் குழுத் தலைவர் சேதுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பாளர் சுசி.கலையரசன், மாவட்டச் செயலாளர் ஜோ.இலக்கியன், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் மதிவாணன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சிற்றரசு, எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாளர் ரகீம், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி வெண்மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, ஜின்னிங் யூனியன் பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜ், மில் சங்கச் செயலாளர் சி.சிவசாமி, அரசுப் பணியாளர் சங்கச் செயலாளர் உ.ம. செல்வராஜ், வங்கி ஊழியர் சங்கச் செயலாளர் எம்.வீ.ராஜன், கட்டடத் தொழிலாளர் சங்கத் தலைவர் என்.செல்வராஜ், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலாளர் எம்.நிர்மலா, இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வெ.வசந்தகுமார், மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் எம்.குணசேகர் உள்ளிட்டோர் பலர் அஞ்சலி செலுத்தினர்.இதைத் தொடர்ந்து, கோவை சுங்கத்தில் உள்ள மயானத்தில் ஞானையாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1920-இல் பிறந்த ஞானையா, அஞ்சல் துறைப் பணியாளர் சங்கத்தின் தேசியப் பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர், தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: