ஜூலை 14, 2017

எழுத்தாளர் டி.ஞானையா காலமானார் --- ஆனந்தவிகடன்( 08.07.2017)


டி.ஞானையா
இடதுசாரி எழுத்தாளரும் தொழிற்சங்கத் தலைவருமான டி.ஞானையா, கோவையில் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 97.

மதுரை, திருமங்கலத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் முடித்தார். பிரிட்டன் ஆதிக்கக் காலத்தில், அப்போதைய தகவல் தொடர்புத்துறையில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரையொட்டி, அங்கேரி, அர்மீனியா நாடுகளுக்குச் சென்று பணியாற்றினார். பிறகு, இந்திய தபால் தந்திதுறையில் சேர்ந்தார். அகில இந்திய அஞ்சல், தந்திப் பணியாளர் சங்கத்தின் செயலாளராக, டெல்லியில் பணியாற்றியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயற்குழுவிலும் மாநிலக் குழுவிலும் செயல்பட்டார்.

எண்பதுகளுக்குப் பிறகு, கோவைக்கு வந்து எழுத்துப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். 'பாகிஸ்தான் பிரிந்தது ஏன்', 'அமெரிக்க பயங்கரவாதம் வரலாற்றுத் தடங்கள்', 'இந்தியா-வரலாறும் அரசியலும்', 'சர்வதேசப் பயங்கரவாதமும் இந்தியப் பயங்கரவாதமும்', 'அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துகளும்', 'இஸ்லாமும் இந்தியாவும்', 'அணு ஆயுத அரசியல்' உட்பட 40 நூல்கள் எழுதியுள்ளார்.

கடைசிவரை எழுத்தை விடாமல் இயங்கிவந்தவர், கோவை டவுன்ஹால் பகுதியில் வசித்துவந்தார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை உலக அளவில் ஒப்பிட்டு, ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும் நிலையில் இருந்தபோது, கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதயப் பிரச்னை இருந்தநிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, சில நாள்கள் ஓய்வெடுத்துவந்தார். மீண்டும் நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டதும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை ஞானையா காலமானார். 
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, ஞானையாவின் உடல், வரும் செவ்வாயன்று அடக்கம் செய்யப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை: