இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவை கேள்வி நேரத்தின்போது கூறியதாவது:

2013-2014-ம் நிதியாண்டில் அஞ்சலகங்கள் மூலம் மணியார்டர் வழியாக ரூ.12,241 கோடி அனுப்பப்பட்டுள்ளன. இதில், ரூ.10.9 கோடி பட்டுவாடா செய்யப்படவில்லை என 80,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது மொத்த தொகையில் 0.7 சதவீதம்தான். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, 300 பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணம் தாமதமாக பட்டுவாடா செய்யப்படுவது, பட்டுவாடா செய்யப்படாமல் இருப்பது ஆகியவை தொடர்பான காரணங்கள் ஆராயப்படுகின்றன. பணம் பெறுபவர் இல்லாமல் இருப்பது, அவர் இறந்திருப்பது, தவறான அல்லது முழுமையற்ற முகவரி, தவறான அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலும் தாமதமாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

ஏதேனும் ஓர் அலுவலர் தாமதமான அல்லது பட்டுவாடா செய்யப்படாததற்கு காரணம் என அறியப்பட்டால், அவர் மீது நிர்வாக ரீதியான அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சேவைக் குறைபாடு காரணமாக பணம் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்பட்டால், பதிலி மணியார்டர் வழங்கப்படும். வேகமாக பணம் பரிமாற்றம் செய்வதற்காக அஞ்சல் துறை இ-மணியார்டர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

உடனடி மணியார்டர் சேவை கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் 16,785 அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் உடனடி பட்டுவாடா, சவுகரியம், நம்பகத்தன்மை, குறைந்த கட்டணம் ஆகிய அம்சங்களைக் கொண்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.