ஏப்ரல் 21, 2013

விருந்தாளி வேடத்தில் உளவாளி!

அன்பிற்கினிய தோழர்களே ,வலைதள நண்பர்களே
வணக்கம் .  இந்தியாவிலுள்ள  அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் இந்திய  அரசியல் விவகாரங்கள் ,இந்திய அரசியல் தலைவர்கள் , மந்திரியாக யார் இருந்தால் தனதுநாட்டு நலனுக்கு உகந்தது   என்பவை  பற்றியெல்லாம்  அமெரிக்க அரசுக்கு எழுதித் தள்ளிய ரகசிய ஆவணங்களை ஹிந்து பத்திரிகை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டு வருகிறது .
உலக நாடுகளில்  உள்ள அமெரிக்க தூதரகங்கள் எவ்வாறெல்லாம் உளவாளிகளாக செயல்பாடு கின்றன என்பதை தோலுரித்து  காட்டும் ஆனந்த விகடனில் வெளிவந்த  பாரதி தம்பியின் கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது .



விருந்தாளி வேடத்தில் உளவாளி!
ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி,  ஜார்ஜ் பெர்னாண்டஸ் என வடக்கிலும்... கருணாநிதி, ஜெயலலிதா, அழகிரி எனத் தெற்கிலும் 'விக்கிலீக்ஸ்’ ஆவணங்கள் ஒவ்வொன்றும் கடந்த காலத்தைப் பெயர்த்தெடுத்துக் கிடுகிடுக்கவைக்கிறது. இந்திய ராணுவத்துக்கான போர் விமானங்கள் வாங்குவதில் ஸ்வீடன் நிறுவனம் ஒன்றுக்கு ராஜீவ் காந்தி இடைத்தரகராகச் செயல்பட்டார் என்பதில் தொடங்கி, இலங்கைக்கு அமைதிப் படை சென்ற சமயத்தில் இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது என்பது வரையிலும் விக்கி கசிவுகள் வரலாற்றின் இன்னொரு முகத்தை நமக்குத் திறந்து காட்டுகின்றன. நமது அரசியல் தலைவர்களின் இரட்டை வேடத்தைத் துல்லியமாக அம்பலப்படுத்துகின்றன.
ஈழத் தமிழர்கள் விஷயத்தில் கருணாநிதியின் பலவீனமான நாடகம், ஜெயலலிதாவின் துணிச்சல் நாடகம் எனப் பாயும் விக்கிலீக்ஸ், கார்த்தி சிதம்பரம் வரையிலும் நீண்டிருப்பதுதான் ஆச்சர்யம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், 'வாக்காளர்களுக்குச் சில சலுகைகள் கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்று அமெரிக்க அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் கார்த்தி. அழகிரி குறித்தும், மதுரையின் வன்முறை சூழல்குறித்தும் வெள்ளை மாளிகைக்கு குறிப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன.
இப்போது 'ஆதார்’ அட்டை கணக்கெடுக்கும் பணி முழு வேகத்தில் நடக்கிறது. 'இது தனி நபர்களின் அந்தரங்கத்தில் தலையிடுகிறது’ என்று ஆதாரை விமர்சிக்கும் பலர், இந்த திட் டத்தின் வரைவு அறிக்கையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுப் பார்த்து விட்டனர். 'ஹைலி கான்ஃபிடென்ஷியல்’ என்று சொல்லி யாருக்கும் தரவில்லை. ஆனால், அந்த 'ஹைலி கான்ஃபிடென்ஷியல்’ அறிக்கை விக்கிலீக்ஸில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதார் திட்டத்தில் திரட்டப்படும் 130 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளும் நாளை இதேபோல வெளியானால், அது தேசத்தின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும்.  
தற்போதைய காங்கிரஸ் அமைச்சரவை பொறுபேற்றபோது பிரணாப் முகர்ஜிதான் நிதி அமைச்சர் என்ற தகவலுக்கு அமெரிக்கா ஆற்றிய எதிர்வினையாக விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல் முக்கியமானது. அப்போதைய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ''என்னது... ப.சிதம்பரம் நிதி அமைச்சர் இல்லையா? பிரணாப் முகர்ஜி எப்படிப்பட்டவர்? இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.வி.சுப்பா ராவுக்கும் பிரணாப் முகர்ஜிக் கும் உள்ள உறவு எப்படிப்பட்டது? ப.சிதம்பரம் நிதி அமைச்சர் இல்லை என்பதை டி.வி.சுப்பாராவ் எப்படி உணர்கிறார்?'' என அதிர்ச்சியடைந்து டெல்லியில் உள்ள தங்கள் தூதருக்கு பதில் அனுப்பியிருக்கிறார். இந்தியாவில் யார், எந்தத் துறையின் அமைச்சராக வர வேண்டும் என்பதில் அமெரிக்காவின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒரு தெளிவான உதாரணம்.
விக்கிலீக்ஸ் ஆவணங்கள் எதுவும் அவர்களின் சொந்தக் கருத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், அந்தந்த நாட்டின் அரசியல், பொரு ளாதார, ராணுவ முடிவுகளையும், நாட்டின் உள் விவகாரங்களையும் உளவுபார்த்துத் தங்கள் நாடு களுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அப்படி அனுப்பப்பட்ட லட்சக்கணக்கான கேபிள் ஆவணங்களைதான் விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இவை அதிகாரப்பூர்வமானவை. அதனால்தான் யாராலும் வலுவுடன் மறுத்துப் பேச முடியவில்லை. உலகம் முழுவதும் ஆயிரத் துக்கும் மேற்பட்ட சுதந்திரப் பத்திரிகையாளர் களைக்கொண்ட விக்கிலீக்ஸ், பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் இந்த ஆவணங்களை பெற்று வெளியிடுகிறது.  
'என் நாட்டு ரகசியங்களை நீ ஏன் சேகரிக்கிறாய்?’ என அமெரிக்காவைப் பார்த்து சுரணையுடன் கேட்கும் அரசு நம்மிடம் இல்லை. 'சரி, ஓட்டுப்போட்ட மக்களுக்கேனும் பதில் சொல்ல வேண்டாமா?’ என்று கேட்கலாம். 'அதுதான் அவர்கள் போட்ட ஓட்டுக்குக் காசு வாங்கிவிட் டார்களே’ என இதற்கும் அவர்களின் மனசாட்சி பதில் சொல்லும். இந்த நிலையில்தான் நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.

உங்கள் ஊரின் விருந்தாளியாக ஒருவரைத் தங்க வைத்திருக்கிறீர்கள். அவருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் ஊர் செலவில் ஜோரா கச் செய்து தருகிறீர்கள். தினந்தோறும் ராஜ உபசாரம்தான். ஆனால், அந்த விருந்தாளி என்ன செய்கிறார்? உங்கள் ஊரின் நல்லது, கெட்டது, ஊரின் முக்கிய முடிவுகள், ரசியங்கள் என அனைத்தைப் பற்றியும் தன் சொந்த ஊருக்குத் தகவல் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஒரு நாள் அந்த உண்மை அம்பலமாகிறது. ஊர் என்ன செய்யும்? 'அவர் விருந்தாளி இல்லை... உளவாளி’ என்ற உண்மையை உணர்ந்துகொண்டு அதுவரை செய்த தவறுகளுக்குத் தண்டிக்கும்; இனிமேல் அப்படிச் செய்யாமல் இருக்கக் கண்டிக்கும். கண்டிக்க வேண்டும். ஆனால், இந்தியா, இதுவரை அமெரிக்கத் தூதரகத்தையோ, தூதுவர்களையோ ஒரு வார்த்தைகூடக் கடிந்துகொள்ளவில்லை. ஏன்? கேரள மீனவர்களைக் கொன்ற இத்தாலி வீரர்களை மீட்டுக் கொண்டுவருவதில் முனைப்புடன் செயல்பட்ட இந்தியா, தன்னை உளவு பார்க்கும் அமெரிக்காவிடம் பம்முவது எதனால்? இந்தக் கேள்விக்கான விடை முக்கியமானது.
இந்தியாவின் இறையாண்மை, ஏற்கெனவே பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமாக அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது. 123 அணு சக்தி ஒப்பந்தம் முதல், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை... புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றாலே, 'நான் எஜமான்... நீ அடிமை’ என்பதைப் புரிந்து கொள்வதுதான். எஜமானை எதிர்த்து அடிமை எந்தக் காலத்தில் பேசியிருக்கிறார்? மன்மோகன் சிங் மௌனமாக இருப்பதன் மெய்ப்பொருள் இது தான். அவர் விரும்பிப் பேசாமல் இருக்கவில்லை. அவரால் பேச முடியாது! அதுதான் உண்மை. அதைத்தான் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.  .
.பாரதி தம்பி 
நன்றி : ஆனந்தவிகடன் 
-- 

1 கருத்து:

Gopal N சொன்னது…

This is very useful.Thank You. We must fight against such imperialist attempts. For that we have to organize our own employees.
- N Gopal PA, Kanchipuram HO