மார்ச் 28, 2013

இலங்கைத் தமிழர் பிரச்சனையும்,மாணவர்கள் போராட்டமும்

இலங்கைத் தமிழர் பிரச்சனையும்,மாணவர்கள் போராட்டமும் 

                2009 ல் விடுதலை புலிகளுக்கும் ,இலங்கை  அரசுக்கும் இடையே நடந்த போரின்போது  இலங்கை ராணுவத்தால்  கொத்து கொத்தாக  அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர் . சரணடைந்த தமிழ் ஈழ வீரர்கள்  சுட்டுக்கொல்லப் பட்டனர் .போர் நடை பெற்ற பகுதிகளில் உயிர் தப்பிய தமிழர்கள்  மின் வேலி இடப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டனர் .அவ்வப்போது குறைந்த வயதுள்ள இளைஞர்களும் பெண்களும் தமிழ் ஈழ வீரர்கள் என போலியாக முத்திரை குத்தப்பட்டு  அம்முகாம் களிலிருந்து இழுத்து செல்லப்படுவார்கள் அப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் யாரும் முகாமுக்கு திரும்பியதில்லை .இவ்வாறு    போரின் போதும் அதன் பின்னும் இலங்கை ராணுவம் நடத்தி வந்த வன்முறை வெறியாட்டத்தை பிரிட்டனின்  டிவி 9 ஒளிபரப்பியபோது  உலகமே அதிர்ந்தது . உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்களும் , மனத உரிமை போராளிகளும் இலங்கையின் ஜனாதிபதி இராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்கவேண்டும் என  ஓங்கி ஒலித்தனர் .



                                  தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரனின் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன்  இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட விதம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனச்சாட்சியை உலுக்கி விட்டது . தன்  பேரனுக்கு, தன்  பையனுக்கு,தன்  இளைய சகோதரனுக்கு நேர்ந்த கொடுமையாகவே  தமிழர்கள் ஒவ்வொருவரின் குடும்பமும்   உணர்ந்தது  .முதல் புகைப்படத்தில் ,தனக்கு நேரப் போகும் கொடூரமான சாவை அறியாமல்   கொடுக்கப்பட்ட பிஸ்கட்டு களை தின்னுகிற    கள்ளம் கபடமற்ற  அவனது கண்கள் பல கதைகள் சொல்கின்றன .அடுத்து அவன் சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்து கிடக்கும்  இரண்டாவது புகைப்படம் எல்லோரது  நெஞ்சையும்  பிளக்க வைத்து விட்டது .  இரக்கமற்ற  கொடூர நெஞ்சம் கொண்ட இலங்கை இராணுவ காடையனின்  இழிசெயல்  அனைவரின் கோபத்தை கிளறிவிட்டது  . 1960 களில்    இந்தி எதிப்பு போராட்டத்தை   மாணவர்கள்  தமிழகத்தில் நடத்தினர் .அதன் பின்னர் இப்போது தான் இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்காக தமிழகத்தில் மாணவர்கள் அறப்போரில் ஈடுபட்டு வருகின்றனர் . அவர்களது போராட்டம் தான் திமுக  வை ஐக்கிய முன்னணி அரசிலிருந்து விலக வைத்தது.அவர்களது போராட்டம் தான் தமிழக சட்ட சபையில் தமிழீழத்திற்கான வெகுஜன வாக்கெடுப்பு தேவை என தீர்மானம் நிறைவேற்ற வைத்தது .மாணவர் சக்தி மிக அபாரமானது ".மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்; அவன் நெஞ்சம் ஓர் நெருப்பு ;அவன் நேர்மையின் மறு பிறப்பு "என்ற பாடல் வரிகளில்  எத்தனை உண்மை உறைந்து கிடக்கிறது  பாருங்கள் .

இப்போது நடைபெற்று வரும் மாணவர்களது போராட்டம் குறித்து ஆனந்த விகடனில் ஸ்டூடன்ட்  பவர் -கிடுகிடுக்கும் தமிழகம் என்ற தலைப்பில்  டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய கட்டுரையும்,.தாயுமாணவர்கள் என்ற தலைப்பில் கவிஞர்  நாமுத்துக்குமார் எழுதிய கவிதையும் கீழே தரப்பட்டுள்ளது 

ஸ்டூடன்ட் பவர்! கிடுகிடுக்கும் தமிழகம்
றுபடியும் தமிழகத்தின் வீதிகள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிந்த நெருப்பு, ஒரு தலைமுறைக்கு முன்புகறுப்பு ஜூலையில் பற்றிய தீ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் தியாகத்தில் சுடர்விட்ட கனல்…  இப்போது பெருந்தீயாக வெடித்திருக்கிறது. ‘இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேவைத் தண்டிக்க வேண்டும்!’ என ஒற்றைக் குரலில் பெரும் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள் தமிழக மாணவர்கள். வழக்கமாக மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி இந்த முறை எடுபடவில்லை. தங்களுக்குத் தாங்களே ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டு மேலும் உத்வேகத்துடன் போராடுகிறார்கள் மாணவர்கள்.
கடந்த 8-ம் தேதி, சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் அமைதியாக உண்ணாவிரதம் இருந்ததுதான் இதற்கான முதல் பொறி. மூன்று நாளாக உண்ணாவிரதம் இருந்தவர்களை அரசு மருத்துவமனையில்அடைத்துஉருட்டி மிரட்டிய அரசு இயந்திரங்கள், இன்று அகதிகள் முகாம் தொடங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் வரை வெகுண்டு எழுந்த மக்கள் சக்திக்கு முன்பாகச் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றன. போராட்டத்தை முடக்குவதற்காக தமிழக அரசும் புதுவை அரசும் கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவித்தன. ஆனால், அதன் பிறகுதான் போராட்டம் உக்கிரமானது. அதுவரை சட்டம் மற்றும் கலைக் கல்லூரிகள் மட்டுமே போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பொறியியல் படிக்கும் மாணவர்களும், மகளிர் கல்லூரி மாணவிகளும் திரண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல், முற்றுகை என தமிழ்நாடு தணலாகச் சுடுகிறது. போராட்டங்களை ஒருங்கிணைக்கும் விதமாகதமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்ட மைப்புஎன்ற பெயரில் மாநிலம் தழுவிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் மாணவர்கள். இணையதளங்களில் இதற்கென சிறப்புப் பக்கங்கள், குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு துளி ஆதரவும் சிந்தாமல் சிதறாமல் சேகரிக்கப்படுகின்றன! 
கல்லூரிகளைத் தாண்டி போராட்டம் பள்ளிக்கூடங்கள் அளவிலும் விரிவடைந்தது யாருமே எதிர்பார்க்காத ஆச்சர்யம். கோவை ஒண்டிபுதூர் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடு பட்டார்கள். 38 பேரைக் கைது செய்தது போலீஸ். தொடர்ந்து கோவை வேளாண்மைக் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை ..டி., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என மொத்த மாணவர்களும் வரிசை யாகக் களம் இறங்கினார்கள்.
இவ்வளவு போராட்டங்கள் நடந்தும் எங்குமே துளியும் வன்முறை இல்லை. பல இடங்களில் மாணவர்களின் பெற்றோர்களும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்த்து தெரிவித்தது ஆரோக்கியமான போக்கு!












மாணவர்களால் துவங்கிய எழுச்சி என்றபோதிலும்,  இது அவர்களுடன் நின்றுவிடவில்லை. திருவண்ணாமலை, பவானி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 பேர் தங்கள் குழந்தைகளுடன் உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
சென்னை மயிலாப்பூரில் கடந்த ஞாயிறு அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸாரிடம் தடியடிபட்டார்கள். தேனி மாவட்டம் கம்பத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் பேரணி நடத்தி, உண்ணாவிரதம் இருந்தார்கள். நாமக்கல்லில் தமிழ்நாடு லாரி சம்மேளன ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மியான்மரைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் சென்னையிலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஆனூர் கிராம பொதுமக்கள் சுமார் 1,000 பேரும், அரியலூர் அருகே செந்துறையில் ஆட்டோ ஓட்டுநர்களும் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். ‘மே 17’ இயக்கத்தினர் மெரினாவில் கூட்டிய மக்கள் கூட்டத்துக்கு யாரும் அழைக்காமலேயேசுயேச்சையாக வந்தார் பீகாரின் சுயேச்சை எம்.எல்.-வான சோம்பிரகாஷ். மும்பை வரலாற்றில் முதல் முறையாக ஈழத் தமிழருக்காக மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினார்கள். டெல்லி பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் கூட்டமைப்பு வீதிக்கு வந்தது. இதில் வட இந்திய மாணவர்களும் அடக்கம். அதே நாளில் சென்னையில் திரண்ட மாணவர்கள் இலங்கைத் தூதரகம், விமான நிலையத்தை முற்றுகையிட்டார்கள். ஆளுநர் மாளிகையை நோக்கி அமைதி ஊர்வலம் சென்ற மாணவர்களைத் தடுத்து நிறுத்தி நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானத்தில் அடைத்தது போலீஸ்.
போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்றன. மாநில அரசால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே இலங்கை விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பிய நடவடிக்கை, சட்டசபைத் தீர்மானம் போன்றவற்றால் தனக்கு உருவாகியிருக்கும்இமேஜ்கெட்டுவிடக் கூடாது எனக் கருதும் ஜெயலலிதா, இந்தப் போராட்டங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை மத்திய அரசை நோக்கித் தள்ளிவிடுகிறார். ‘இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மௌனமாக இருப்பது அதிருப்தி அளிக்கிறதுஎன்று பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். ஆனால், மாநில அரசின் உளவுத் துறையோ, உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களைஅரசு வேலை கிடைக்காது. பாஸ்போர்ட் கிடைக்காதுஎனத் தந்திரமாக அச்சுறுத்துகிறது. ஆனால், இது தனது கை மீறுகிறது என ஜெயலலிதா கருதும்போது போலீஸ் வெறியாட்டம் நிகழக்கூடும். அதை எதிர்கொள்ள மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சக்தியாகத் திரள வேண்டியது அவசியம்.

இந்த விவகாரத்தில் கவனிக்கத்தக்க விஷயம், .தி.மு.-வும் தி.மு.-வும் தீர்மானத்தில் திருத்தம் கேட்கின்றன. ஆனால், மாணவர்களின் பெரும் பகுதியினர் தீர்மானமே கபட நாடகம் என்கிறார்கள். ”ஆடு நனைவதாக ஓநாய் கண்ணீர் விடும் கதைதான் அமெரிக்காவின் தீர்மானம். 2009-ம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது அங்கு பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது அமெரிக்காவுக்குத் தெரியாதா? அப்போது வேடிக்கை பார்த்த அமெரிக்கா, இப்போது ஏதோ நியாயவான்போலத் தீர்மானம் கொண்டுவருகிறது. எனில், இலங்கையை வைத்து தெற்காசியாவில் ஏதோ காரியம் சாதித்துக் கொள்ள அமெரிக்கா முயல்கிறது. அதற்காக இலங்கையைத் தன்னிடம் பணியவைக்க இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்துகிறது. அதையும் தாண்டி, ஈராக், பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான் இப்போது சிரியா என உலகம் முழுவதும் அமெரிக்கா நிகழ்த்திவரும் இனப்படுகொலைகளும், போர்க் குற்றங்களும் நமக்குத் தெரியும். ஆகவே, இலங்கையைத் தண்டிக்கக் கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் கோரிக்கை எல்லாம் தனி ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும். அங்கு நடந்தவை வெறும் போர்க் குற்றங்கள் அல்ல. அவை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. இந்த அடிப்படையில் ராஜபக்ஷேவை இனப்படுகொலையாளன் என அறிவித்து தண்டனை வழங்க வேண்டும். ராஜபக்ஷே மட்டுமல்லஅந்த இன அழிப்புப் போரில் பங்கேற்ற இலங்கை அதிகார வர்க்கம் அனைத்தும் முழுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!” என்கிறார்கள்.
இந்தக் கோரிக்கைகளை மாணவர்கள் வென்றெடுப்பார்களா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கஇந்த மாணவர் எழுச்சியை முன்னணி அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்பதே வெளிப்படையான உண்மை.
ஏனெனில், இந்தப் போராட்டங்கள் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் நடைபெறவில்லை. இந்தப் போராட்டங்களால் அவர்களின் கட்சிகளுக்கு எந்த வகையிலும் லாபம் இல்லை. அதைவிட வும், மாணவர்கள் இப்படி அரசியல் ரீதியில் விழிப்படைவது அவர்களின் லாப அரசியலுக்கு ஆப்புவைக்கும். ஆகவே, மாணவர்கள் முதலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, தங்கள் போராட்டத்தின் பலனை அறுவடை செய்வதற்காக நாக்கில் எச்சில் ஊற சுற்றிவரும் ஓட்டுக் கட்சிகளிடம்தான்!
டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: உசேன், ஜெ.வேங்கடராஜ்
தாயுமாணவர்கள் (தாயு மாணவர்கள்)





















ஒரு காலைத் தாங்கிப்பிடித்து
மறு காலின் உதவியுடன்
விந்தி விந்தி நடந்து
உண்ணாவிரதப் பந்தலுக்கு
வந்தமர்ந்த தகப்பன்
மயங்கிக்கிடந்த
மகனிடம் சொன்னான்;
இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல
என் மூட்டெலும்பை உடைச்சாங்க.
அப்ப வெதைச்சது
இப்ப மொளைக்குது!”


தெருமுனைத் தேநீர்க்கடையில்
நாளிதழில் முகம் மறைந்த
யாரோ ஒருவரின் குரல்;
பசங்க தெளிவாத்தான் இருக்காங்க!”

வாகன நெரிசலுக்குள்
தனக்கான வழியைத்
தேர்ந்தெடுத்து ஓட்டியபடியே
புல்லரித்த கைகளைக் காட்டி
ஆட்டோ ஓட்டுனர் சொன்னார்;
கடற்கரையில் போராட்டம் முடிஞ்சதும்
சுத்தப்படுத்துனாங்க பாருங்க
அங்கதான் சார் ஒசந்துட்டாங்க!”

பூங்காவில் வாக்கிங் முடித்த
பஞ்சாபகேசன் சொன்னார்;
(ரிட்டையர்டு ஏதோ ஓர் அதிகாரி)
அண்ணா யுனிவர்சிட்டி, ..டி. ஸ்டூடன்ட்ஸ்கூட
ஸ்டிரைக் பண்றாங்களா?
கான்ட் பிலீவ் திஸ்!”

தொலைக்காட்சியில் செய்தி பார்த்து
மழலையுடன் மகன் சொன்னான்;
பக்கத்து ஊருல
ஒரு அண்ணாவைக் கொன்னுட்டாங்களாம்
நானும் ஸ்டிரைக் பண்ணப்போறேன்!”

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு
நான் சொன்னேன்;
இந்தப் போராட்டத்தை நடத்துவது
மாணவர்கள் அல்ல

இவர்களுடன்
மனிதநேயமும் கோபமும்
கொந்தளிக்கும் கண்களுடன்
மாணவிகளும் இருப்பதால்
இதை நடத்துவது;
தாயுமாணவர்கள்!

கவிஞர்  நா. முத்துக்குமார்


நன்றி : ஆனந்தவிகடன் 

2 கருத்துகள்:

Jayaraman சொன்னது…

எல்லாம் சரிதான். ஆனால் தனி ஈழம் வேண்டுமென்று தற்போது அந்த இலங்கையில் எவரும் போராடாத போ து வெறு ஒரு நாட்டிலிருந்து அப்படி ஒரு கோரிக்கை வைத்தால் அது சாத்தியமாகுமா?

Jayaraman சொன்னது…

எல்லாம் சரிதான். ஆனால் தனி ஈழம் வேண்டுமென்று தற்போது அந்த இலங்கையில் எவரும் போராடாத போ து வெறு ஒரு நாட்டிலிருந்து அப்படி ஒரு கோரிக்கை வைத்தால் அது சாத்தியமாகுமா?