மே 05, 2023

தோழர் காரல் மார்க்ஸ் 205வது பிறந்த நாள்!

 தோழர் காரல் மார்க்ஸ்

205வது பிறந்த நாள்

 

உலகத் தொழிலாளர் விடுதலைக்காக உயரிய தத்துவம் தந்த புரட்சியாளன் மாமேதை மார்க்சின் இல்லற வாழ்வு மிகுந்த துயரமும் வறுமையும் நிறைந்தது.


தனது உற்ற தோழன் ஏங்கல்ஸிற்கு எழுதிய கடிதங்களில் வறுமையை மார்க்ஸ் விவரித்துள்ளார்.


எடுத்துக்காட்டாக சில. 


நியூயார்க் ட்ரிப்யூன் என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களை அனுப்புவதற்கு போதிய

ஸ்டாம்பு வாங்க வழியில்லாமல் குழந்தைகளின் பழைய பூட்ஸ்களை அடகுவைத்து கடன் வாங்கி இருக்கிறார்.  


குடும்பச் செலவிற்கு தன் மேல் சட்டையை அடகு வைத்துவிட்டு பல நாட்கள் சட்டையில்லாமல் வெளியில் செல்ல வாய்ப்பின்றி வீட்டிலே அடைந்து கிடந்ததுமுண்டு.


மார்க்சின் துணைவியார் ஜென்னி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பெல்ஜியம் நாட்டு மந்திரியின் சகோதரி. தானே விரும்பி கைப்பிடித்த மார்க்சுடன் இல்லற வாழ்வில் சந்தித்த வறுமையே அதிகம்.

இருப்பினும் தன் கணவனின் இலட்சியம் நிறைவேற வசதிகளைத் தியாகம் செய்து வறுமையைப் பகிர்ந்து கொண்டார்.


மார்க்சுடன் இல்லற வாழ்வில் சந்திக்கும் வறுமை குறித்து தன் நண்பனுக்கு ஜென்னி எழுதிய கடிதத்திலிருந்து....


கடுமையான முதுகு வலி மற்றும் மார்பகவலி இவற்றுடன் என் குழந்தைக்கு பாலூட்டுவேன். ஆனால் குடித்த பாலைவிட குழந்தை அதிகமாய் என் தூக்கத்தைப் பறித்துக் கொண்டது .சமீபமாக வலிப்பு நோய் ஏற்பட்டு உயிருடன் போராடுகிறது.


ஒருமுறை பால் குடிக்கும்போது வலிப்பு வந்துவிட பற்கள்பட்டு மார்பில் வெளியான  இரத்தத்துடன் பாலையும் சேர்த்து குழந்தை பருகியது. 


குடியிருந்த வீட்டைக் காலி செய்ய ஐந்து பவுன் கொடுக்க முடியாதபோது ஏலம் போடும் தரகர்கள்  துணி மணிகளோடு குழந்தைகள் கதறக் கதற  பொம்மைகளையும் எடுத்துக் கொண்டார்கள். 


வீட்டில் இருந்த படுக்கைகள் தட்டு முட்டுக் சாமான்கள் இவற்றைவிற்று ரொட்டிக்காரன் பால்காரன் வைத்தியன் இறைச்சிக் கடைக்காரன் இவர்களின் கடனைத் தீர்த்த பின்பே வேறு வீட்டுக்கு குடி புகுந்தோம். 


கடைசிக்குழந்தைபிரான்சிஸ்கா மார்புச்சளியால் இறந்து போனது.


பணமுடை காலத்தில் இறந்து போன குழந்தைக்கு சவப்பெட்டி வாங்க முடியவில்லை.

நண்பர் ஒருவர் பெரியமனதுடன் கொடுத்த  இரண்டு பவுனில் தான் சவப்பெட்டி வாங்கினேன். அந்தக் குழந்தை பிறந்த போதும் தொட்டில் வாங்க முடியாது போனது போல  இறந்த போதும் சவப்பெட்டி வாங்க கஷ்டப்பட்டுப் போனேன்.


மார்க்சின் இறுதிநாட்களில் ஏங்கல்ஸ் தான் பண  உதவி செய்தார். 


கட்டுரைகள் வெளியாவது குறைந்து பத்ரிகை வருவாய் இல்லாதபோது மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்.


" என்னை யாராவது பூமிக்குள் புதைத்து விட்டால் நான் திருப்தியடைவேன். இந்த மாதிரி வாழ்க்கையைவிட அதுவே மேல்."


வறுமை கோரப்பிடியை

இறுக்கும் போது தனது இரண்டு பெண்களை பெரிய மனிதர்கள் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்துவது, மணைவி கைக்குழந்தையுடன்  அநாதை விடுதிக்கு சென்று விடுவது என தீர்மானித்த போது ஏங்கல்ஸ் அனுப்பிய  ஐந்து பவுன் நிலைமையை மாற்றியது.


வைத்தியம் பார்த்தவனுக்கு கடன் செலுத்த முடியாமல் வழக்குத் தொடர்வேன், 

வீட்டிற்கு கரண்டு தண்ணீர் சப்ளை நிறுத்திவிடுவேன் என மிரட்டிய போது மார்க்ஸ் யாருக்கும் தெரியாமல் மான்செஸ்டர் ஓடிப்போனதும் உண்டு. 


1881ல் ஜென்னியும் 1883ல் மார்க்சும் இறந்து போகின்றனர்.


வறுமை சூழ்ந்த வாழ்வில் தான் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையும் 1867ல்

"காபிடல்" முதல் தொகுதியும் மறைவிற்கு பின் 1883 மற்றும் 1894ல் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளும் வெளியாகின.


உற்ற தோழன் ஏங்கல்ஸ், மார்க்ஸ் இறப்பில் மயான  உரையில் மார்க்ஸ் இறந்துவிட்டான் எனச் சொல்ல வில்லை. மார்க்ஸ் தான்

சிந்திப்பதை இன்றுடன் நிறுத்திக் கொண்டான் என்றார்.


1895ல் ஏங்கல்ஸ்  மரணமடைந்தார். 


உலகு போற்றும்   இலட்சியவாதிகள் வாழ்க்கை பெரும்பாலும் துயரைத் தான் தோழமை பூண்டதாய் இருந்துள்ளது.


-கா. செல்வராஜ்

கருத்துகள் இல்லை: