ஜூலை 05, 2021

தோழர் K.மூக்கையா பணி ஓய்வு பாராட்டு விழா!

 
 
நமது கோட்டத்தின் முன்னாள் அஞ்சல் மூன்று  செயலர், மத்திய அரசுஊழியர் மகாசம்மேளனத்தின் முன்னாள்அமைப்புச்செயலர் அருமைத்தோழர் K. செல்வராஜ் (RETD SENIOR ACCOUNTS OFFICER) மற்றும் முன்னாள் அஞ்சல் மூன்று செயலாளர் தோழர் V.மலைராஜ் (ஆசிரியர்) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னாள் அஞ்சல் மூன்று செயலாளர் நமது அன்புத் தோழர் P.சேர்முகபாண்டியன் (RETD SENIOR ACCOUNTS OFFICER) அவர்கள் தோழர் K.மூக்கையா அவர்களை பாராட்டி  எழுதிய அருமையான கட்டுரை உங்கள் பார்வைக்கு 

தோழர் கே. மூக்கையா தலைமை  அஞ்சலக அதிகாரி சிவகங்கை அவர்களது பணி நிறைவுவிழா - வாழ்த்துக்கள்


இன்று  ( 30.06.2021- புதன்கிழமை ) நமது தோழர் கே மூக்கையா  தனது அரசுப்பணியை  நிறைவு செய்கிறார் . ஜனவரி 1981 ல் பணியில் சேர்ந்த   அவர்  40 1/2 ஆண்டுகள் அஞ்சல் துறையில் பணிபுரிந்துள்ளார் .எனவே அஞ்சலகப்பணியில்  நீண்ட அனுபவம் நிறைந்தவர்.   சிவகங்கை கோட்டத்தில் .அஞ்சலப்பணியில்  எல்லோருக்கும்  நல்லதோர் வழிகாட்டியாக  இருந்து வருகிறார் .  பொது மக்களை அணுகுவதில் , ஊழியர்களை அரவணைத்து செல்வதிலும்    தெளிந்த  ஞானம் கொண்டவர் .அனைத்து ஜெனரல் லைன் பதவிகளில் பணியாற்றிய அனுபவம்  , PSD , RO போன்ற அலுவலகங்களில் பணியாற்றியதில்   கிடைத்த அனுபவம் போன்றவை   எந்த பிரச்சனையை எப்படி கையாள வேண்டும்  என்ற திறனை  அவருக்கு கற்று தந்திருக்கின்றன .


சிறந்த தொழிற்சங்கவாதி

சிவகங்கை கோட்ட தொழிற்சங்கத்தின் மீது ஆழ்ந்த  பிடிப்பும்  அதன் பொறுப்பாளர்கள் மீதும் பேரன்பும் கொண்டவர் தோழர் மூக்கையா .  எல்லாப் போராட்டங்களிலும் முன்னின்று கலந்து கொள்வார் . வேலை நிறுத்த காலங்களில்  அவரது பங்களிப்பு சிறப்பாக அமையும் .  ஆரம்பத்தில்  சிறிது காலம் காரைக்குடி  கோட்டத்திலும் , சமீபத்தில் சில காலம்     மதுரைக் கோட்டத்திலும்  , விருதுநகர் கோட்டத்திலும்  போஸ்ட்மாஸ்டர் கிரேடில் பணிபுரிந்த நாட்கள்  தவிர அவரது பணி  முழுவதும் சிவகங்கை கோட்டத்தில் தான்  இருந்தது . பல  முறை தொழிற்சங்க பொறுப்புக்கள அவரை தேடி வந்தன . குடும்ப சூழலை காரணம் காட்டி  அதை மறுத்துவிட்டார் . அஞ்சல் மூன்று கோட்ட சங்கத்தின் கடந்த  மாநாடு நடை பெற்ற  போது தோழர்  மூக்கையா  விருதுநகரில் பணியாற்றியதால்  அவருக்குபொறுப்பு  தரமுடியாமல் போனதற்கு மிகவும் வருத்தம் அடைந்தனர் இப்போதுள்ள சங்கப் பொறுப்பாளர்கள் .  அந்த அளவுக்கு தொழிற்சங்க தோழர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்   . இளைய தலைமுறை தோழர்கள் அவரது பணியில் நேர்மை ,  தனிமனித  ஒழுக்கம் ,தொழிற்சங்கத்தின் மீது கொண்ட ஆழ்ந்த பிடிப்பு , போன்றவற்றை கடைப்பிடிப்பதன்  மூலம்  தொழிற்சங்க அரங்கில்  தங்களை மேம்படுத்திக்கொள்ள  முடியும் ; அலுவலக வாழ்வில்  ஒளிவீச   முடியும்.

                 கோட்டத்திற்கும், இயக்கத்திற்கும் பெருமை சேர்த்தவர்.

               சிவகங்கை  கோட்டத்தின் பாரம்பரிய தன்மையை சென்ற இடங்களில் எல்லாம் நிலை நிறுத்தி கோட்டத்திற்கும்  கோட்டத்தின் NFPE இயக்கத்திற்கும் பெருமை சேர்த்தவர். சொர்க்கமே என்றாலும் நம்ம சிவகங்கை கோட்டம் போலாகுமா? என்று பாடாத குறையாக வாய் வலிக்க வலிக்க    நம் கோட்ட பெருமையை சொல்லிக் கொண்டே இருப்பார். எனவே தான் தனது பணி நிறைவு சிவகங்கை கோட்டத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக   மதுரையில் குடும்பம் இருந்தாலும்   விருப்ப மாறுதல் பெற்று சிவகங்கை  HO விற்கு வந்தார் .


சிறந்த அஞ்சலக அதிகாரி; நல்ல நிர்வாகி

                 அவர்  அஞ்சலக அதிகாரியாக பணியாற்றும் இடங்களில் எல்லாம் அவருக்கு கீழே பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கேடயமாக இருப்பார்.  அஞ்சலகத்தின்  வேலை ஒவ்வொன்றையும் இப்படி செய்தால் மட்டுமே செம்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்று வரையறுத்து  செய்வார். அதை மற்ற ஊழியர்கள்  கடைபிடித்து வந்தால் ஆபிசில்  எந்தவொரு பிரச்சனையையும் அவர்கள்  சந்திக்க வேண்டிய அவசியமே இராது. . மேலும் அஞ்சலக வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை முழுமையாக கேட்டு அதை தீர்த்துவைப்பார் . அவரது அணுகுமுறையால்     அவர் வேலை பார்க்கும் இடங்களிலெல்லாம்  வாடிக்கையாளர்கள் மத்தியில்அஞ்சலகத்தின்  பெருமை கூடியது.


நேர்மைக்கு ,ஒழுக்கத்திற்கு ரோல் மாடல்

                      அவருக்கு கீழ் உள்ள அலுவலகங்களில் யாரவது ஒருவர் தவறு செய்தால் அது பிறரையும் பாதிக்கும் என்பதை நன்கு அறிந்தவர்  . எனவே    சிறு தவறு நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை   நேரில் வரச்சொல்வார் .  இம்மாதிரியான தவறுகளை  செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறுவார்  . அது மட்டுமின்றி  இனி இம்மாதிரி நடந்தால் நான் மேலிடத்திற்கு ரிப்போர்ட் செய்ய வேண்டி இருக்கும் என்று கறாராக சொல்வார் . தயக்கம் காண்பிக்க மாட்டார்    . இந்த அணுகுமுறை மூலம்   முறைகேடுகள்  ஏதும் நடக்குமுன்னே  அதை தடுத்து நிறுத்தி தனக்கு கீழுள்ள  ஊழியர்கள்  அனைவரையும்  பாதுகாத்து வந்தார் . அவர் பணியாற்றிய இடங்களில்  நேர்மையும் ஒழுக்கத்தையும்  தான்  கடைப்பிடிப்பதோடு  மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களுக்கு ரோல் மாடலாக இருந்து அவரது வழிக்கு ஈர்த்து விடுவார் .


தேர்ந்த வாசிப்பு ரசனை கொண்டவர்

                நானும் அவரும் சேர்ந்து  பயணம் செய்யும் போது  தொழிற்சங்கம் , அலுவலகம்  குறித்து  பேசி முடித்ததும் , படித்த புத்தகங்கள் பற்றியே  எங்கள் பேச்சு இருக்கும் . மானாமதுரை HO  வின் அஞ்சல் மனமகிழ்  மன்றத்தில் ஒரு சிறந்த நூலகம் அப்போது உருவாகி இருந்தது . ஒரு குறிப்பிட்ட  காலகட்டத்தில் அது  சரி வர பராமரிக்கப்படவில்லை  தோழர் கே. மூக்கையா அவர்கள் போஸ்ட் மாஸ்டராக இருந்த போது அதை மீண்டும் பராமரித்து வாசிப்பு பழக்கத்தை ஊழியர்களிடமும் அவர்களது குழந்தைகளிடமும் கொண்டுவர பெரு முயற்சி செய்து வந்தார் . இதிலிருந்தே  வாசிப்பு மீது  அவர் கொண்ட ஆர்வத்தை  நாம் புரிந்து கொள்ளலாம்   சமீபகாலமாக படிக்க நேரம் போதவில்லை .   அலுவலகப்பணிக்கு  இப்போதைய தொழிற்நுட்பம் தரும் நெருக்கடியான சூழல்  , அலுவலகத்திற்கு பயணம் செய்து வரும் நேரம் போன்றவையே இதற்கு  காரணம் என்று சொன்னார் . பணி நிறைவுக்கு பின்னர்  கிடைக்கும் நேரத்தை புத்தக வாசிப்புக்கு பயன் படுத்துவேன் என்றும் என்னிடம் தெரிவித்தார் . நிறைய  வாசிக்க , வாசித்தவற்றை நம்மோடு பகிர்ந்துகொள்ள அவரை வாழ்த்துவோம்

பயணம்  செய்வதில் ரசனை கொண்டவர்

                       பயணம் செய்வதை ரசனையாக கொண்டவர்களுக்கே பயணம் தரும் அறிவும் , அனுபவமும்  புரியும் .   புதிய புதிய இடங்கள்   மனித வாழ்வின் பலவிதமான பரிமாணங்களை   புரிந்து கொள்ள உதவும்  . பயணம் தரும் புத்துணர்ச்சிக்கு இணையானது ஏதுமில்லை . இதை நன்கு உணர்ந்தவர் தோழர் கே. மூக்கையா . இந்தியாவின்  முக்கியமான எல்லா இடங்களுக்கும் பயணித்திருக்கிறார் .  விடுமுறை தினங்கள் சேந்து வந்தால் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான் . எப்படியாவது ஒரு டூர் ஏற்ப்பாடு செய்துவிடுவார் . அதில் ஆர்வமுள்ளவர்கள்  அவரோடு சேர்த்து கொள்வார்கள் . தாங்களாக எங்கும்  செல்வதற்கு  யோசிப்பவர்கள் கூட அவரால் பல இடங்களுக்கு டூர் சென்று வந்துள்ளனர் . பணி நிறைவுக்கு பின்   பிசியாக  வைத்துக்கொள்ள  அவர் இனி மேற்கொள்ளும்   பயணங்கள் கண்டிப்பாக  உதவும்.

நட்பை பேணும் பண்பாளர்

                 தனது  எளிய புன்சிரிப்பாலும்  இனிய அணுகுமுறையாலும் தோழர் மூக்கையா  யாரிடமும் எளிதில் பழகிவிடுவார் . எனவே தான்  ஆரம்பத்தில் பணியாற்றிய   காரைக்குடி  கோட்ட தோழர்கள் ,  விருதுநகரில்   தலைமை அஞ்சலக அதிகாரியாக  பணியாற்றிய குறைந்த  காலத்தில் நிறைவாக பழகிய பல தோழர்கள் , மதுரை மேலூரில் அஞ்சலக அதிகாரியாக பணியாற்றியபோது அவரது நட்பு வட்டத்துக்குள் இருந்த பல தோழர்கள் , சிவகங்கை கோட்டத்தில் பணியாற்றும்   அனைத்து தோழர்கள்  வரை  எல்லோரிடமும்   நட்பு பாராட்டி வருவது   பாராட்டுக்குரியது .


பணி நிறைவு வாழ்த்துக்கள் தோழரே!

 மகிழ்ச்சிகரமான, ஆரோக்கியமான , மிகவும் பிசியான  பணி நிறைவு வாழ்க்கை அமைய அவருக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . அலுவலக  வாழ்வில்  ஜொலிக்க  அவருக்கு உற்ற துணையாக இருந்த அவரது  மனைவிக்கு எனது  நல் வாழ்த்துக்கள் !

பி.சேர்முக பாண்டியன்
@மதுரை



-----------------------------------------------------------------------------------------------------------------------

நிகழ்ச்சியில்எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒருசில உங்கள் பார்வைக்கு!

 


 

கருத்துகள் இல்லை: