மார்ச் 03, 2021

நூறு ஆண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசை கண்டித்து 20 கோடி பேர் பங்கேற்கும் நவம்பர் 26, 2020 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

  *நூறு ஆண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசை கண்டித்து 20 கோடி பேர் பங்கேற்கும் நவம்பர் 26, 2020 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்*

_________________________


**மத்திய  அரசு நாட்டின் 44 தொழிலாளர் நல சட்டங்களை ஒன்றாக தொகுத்து 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியது அல்ல பிரச்சனை. 44 சட்டங்களை 4 சட்டங்களாக தொகுக்கும் போது அதில் பல திருத்தங்களையும்,புதிய சட்ட பிரிவுகளையும் சேர்த்துள்ளது.


அந்த திருத்தங்களும்,சேர்க்கைகளும்தான் தற்போதைய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அழைப்பிற்கு காரணம்.


தற்போதைய தொழிலாளர் நல சட்டங்கள் என்கிற பெயரில்  சட்டப்புத்தகத்தில் இருக்கும் உரிமைகளை (நடைமுறையில் இல்லை) முற்றிலும் பறித்து. ஏற்கனவே தொழிலாளர் சட்டங்களை நடைமுறைபடுத்தாமல் இருந்த தொழில் துறை முதலாளிகளின் சட்டவிரோதமான செயல்களை சட்டப்பூர்வமாக மாற்றியமைத்திருப்பதே இந்த சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதன் நோக்கம்.


இந்த புதிய சட்டத்திற்கு பிறகு பல தொழிலாளர் போராடி தங்கள் உயிரை தியாகம் செய்து பெற்றெடுத்த உரிமைகளான 8 மணி நேர வேலை, பணிக்கொடை,ஓய்வூதியம், குறைந்த பட்ச ஊதிய முறை, தொழிற்சங்க உரிமை,பணிபாதுகாப்பு உரிமை என எல்லா உரிமைகளையும் முற்றிலும் பறித்து தொழில் துறை முதலாளியத்திற்கான நவீன கொத்தடிமைகளாக மாற்றபடுவார்கள்.


ஒருவரை வேலையை விட்டு தூக்கிவிட்டால் அந்த இடத்தில் இன்னொரு நபரை உடனே எடுத்துவிடலாம் என்கிற அளவிற்கு நாட்டில் உழைப்பு சந்தையில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை பல்கி பெருகிகொண்டே வருகிறது.


காரணமே இல்லாமல் வேலையை விட்டு தூக்கினால் தொழிலாளியானவர்  தான் சார்ந்திருக்கும் தொழிற்சங்கத்தின் மூலமோ,தொழிலாளர் நீதிமன்றத்தின் மூலமோ உரிமைகளை கேட்டுப்பெற முடியும் என்று முன்பு இருந்ததை இனிமேல் பெற முடியாது. 


தொழிலாளர் நீதி மன்றமும் கிடையாது. 15 ஆயிரத்திற்கு மேல் 1 ரூபாய் கூடுதலாக மாத சம்பளம் பெற்றால் நீ தொழிலாளியும் கிடையாது.


நீதிமன்றம் இருந்தால் தானே உரிமையை கேட்டு போவாய்? தொழிலாளர் உரிமையை கேட்பதற்கு முதலில் நீ தொழிலாளியாக இருந்தால் தானே?


100 பேருக்கு குறைவாக தொழிலாளர் எண்ணிக்கை இருந்தால் தொழிற்சங்க உரிமை ரத்து. 15001 ஆக சம்பளம் கொடுத்து உங்களை முதலாளியாக மாற்றிவிட்டு தொழிற்சங்க உறுப்பினர்  எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள். பிறகு தொழிற்சங்க உரிமம் ரத்து. பிறகு நீங்கள் 100 ஆட்களை தேற்றி தொழிற்சங்கம் அமைக்கலாம் என்று சென்றால் அதற்கு தொழிற்சாலை முதலாளியால் பணிக்கமர்த்தப்பட்ட பதிவாளர் என்பவர் ஒப்புதல் அளிக்கவேண்டுமாம். 


இதுபோல் ஏராளமான தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்ட தொகுப்புதான் பழைய சட்டங்களை  புதிதாக தொகுத்து வந்த 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளும்.


இப்போது உங்களுக்கு முன் இருப்பது இரண்டே வழிதான் ஆலை முதலாளி என்ன சொல்கிறானோ அதை கேட்டு நடப்பது,இல்லை என்றால் வேலையை விட்டு வெளியேறுவது.


தொழிலாளியை கசக்கி பிழிந்து உழைப்பை உறிஞ்சி இனி அவன் தேவைப்படமாட்டான் என்றவுடன் தூக்கி எறிந்து உழைப்பு சந்தையில் மலிவாக கிடைக்கும் இன்னொரு தொழிலாளியை வேலைக்கு எடுத்து அதே போல் சுரண்டுவான்.


இந்த மனிதன்மையற்ற செயல்களை சட்ட பூர்வமாக ஆக்கியுள்ளது இந்திய அரசு. இந்த சட்டம் முறைசார்ந்த தொழிலாளர்களை மட்டும் இதில் சேர்க்க வில்லை முறைசாரா தொழிலாளர்களையும் சேர்த்துள்ளது. நாட்டின் பாதிக்கு மேலான மக்கள் இந்த புதிய சட்ட தொகுப்புகளால் நவீன கொத்தடிமைகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.


அதே போல் புதிய 3 வேளாண் சட்டங்களும் நாட்டின் ஆகப்பெரும்பான்மையான விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டி கார்ப்பரேட் கூலிகளாக மாற்றி மொத்த விவசாயத்தையும் முதலாளித்துவம் கைப்பற்ற தேவையான வேலைகளை இந்திய அரசு செய்துள்ளது.


இப்போது நம் கண் முன் இருக்கும் அபாயம் என்பது எதோ ஒரு தொழிற்சாலையில் முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனை இல்லை. மாறாக பன்னாட்டு,உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் இவைகளுக்கான அரசிற்கும் நாட்டின் 90% மக்களுக்கும் இடையேயான ஒரு யுத்தம்.


இதனை நாம் மனதிற்கொண்டு நவம்பர் 26 ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு நாட்டின் பெரும் தொழிற்சங்கங்களும்,விவசாய சங்கங்களும்  அழைப்பு விடுத்துள்ளன.


இந்த அழைப்பு என்பது நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்குமான அழைப்பு, மாணவர்களுக்கான அழைப்பு,வேலையற்றவர்களுக்கான அழைப்பு இந்த போராட்டத்தை வெற்றியடைய செய்வதனை ஒரு தொடக்கமாக கொண்டு நாட்டில் ஒரு பெரும் மக்கள் எழுச்சியை உருவாக்க செய்யவேண்டும்.


நவம்பர்_26 ,2020  போராட்டத்தை மாபெரும் வெற்றி பெறச்செய்வோம்

கருத்துகள் இல்லை: