ஜூலை 14, 2017

நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்துக் கொண்டேன்” – டி.ஞானையாவின் இறுதி சாசனம்--தீக்கதிர் -(14.07.2017)

தீக்கதிர் - 14.07.2017

நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்துக் கொண்டேன்” – டி.ஞானையாவின் இறுதி சாசனம்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் டி.ஞானையா தனது 97 வது வயதில் கடந்த 8.7.2017 அன்று கோவையில் காலமானார்.
தோழர் டி.ஞானையா மதுரை அருகே திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டை என்ற கிராமத்தில் 1921ம் ஆண்டு ஜனவரி 7ம் நாள் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ பட்டம் வரை பயின்றார். 1940ல் தடை செய்யப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். 1941 அக்டோபரில் கரூரில் அஞ்சலகத்தில் எழுத்தாராக பணியில் சேர்ந்தார். பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ போஸ்டல் சர்வீஸில் சேர்ந்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரில் ராணுவ அஞ்சல்துறை பணியில் இருந்த போது, எகிப்து,சிரியா, பாலஸ்தீனம், லிபியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும், பாகிஸ்தான் கராச்சியில் ஐந்தாண்டுகளும் பணியாற்றினார். தபால் தந்தி தொலை பேசி தொழிலாளர்களின் அகில இந்திய சங்கத்தின் பொதுச்செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார்.
தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் ஜெகஜீவன்ராம் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். மாஸ்கோவில் உள்ள லெனின் சமூகவியல் உயர்கல்வி நிறுவனத்தில் ஆறுமாதம் மார்க்சிய லெனினிய அரசியல் கல்வி பயின்றார். பணி ஓய்வுக்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு, மாநில செயற்குழு, தேசியக்குழு, மாநில கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு உள்ளிட்ட பொறுப்புகளில் திறன்பட செயல்பட்டவர்.
கோவையில் வாழ்ந்து வந்த இவர் 2001ம் ஆண்டு 80 வது வயது நிறைவின் போது, தனது மரணம் குறித்து, இறுதி மரண சாசனத்தை ஈரோடு எஸ்.மகாலிங்கம், கோவை, என்.காளியண்ணன் ஆகியோர் முன்னிலையில் 7.1.2001 அன்று எழுதி ஒப்படைத்திருந்தார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட அரசியல் நூல்களை எழுதியிருக்கிறார்.  ஆனால் அதன் பின்னர் கடந்த 17 ஆண்டுகள் தனது இறுதி மூச்சு வரை கொள்கை பிடிப்போடு, பல்வேறு புத்தங்களை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  இந்நிலையில் 8.7.2017 அன்று உடல் நலம் குன்றி மருத்துவமனையில் காலமானார்.
தற்போது அவர் ஏற்கனவே எழுதி வைத்திருந்த மரணம் சாசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் விபரம் வருமாறு :
மரணத்திற்கு பின் மிஞ்சுவது உடல் மட்டும் தான். அந்த உடலை எரித்தாலோ அல்லது புதைத்தாலோ மிஞ்சுவது எலும்புக் கூடுதான், இதுவே விஞ்ஞானம். இதற்கு மாறான கருத்துகளெல்லாம் மூட நம்பிக்கைகளே மரணத்திற்குப் பிறகு மிஞ்சுவது நமது சந்ததிகள், உற்றார், உறவினர், நண்பர்கள், தோழர்கள் மற்றும் மனித குலமுமாகும். நம்மைப் பற்றிய நினைவுகளுக்கு இவர்களில் சிலர் அஞ்சலி செலுத்துவார்கள், நாம் வாழ்ந்தபொழுது நாம் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு அளித்துள்ள பங்கு நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும்.
மரணத்திற்குப் பிறகு ஆன்மாவோ, ஆவியோ, மறுபிறவியோ அல்லது உயிர்த்தெழுதலோ உண்டென்று நம்புவது கற்பனையே, கட்டு கதைகளும் கூட.
உடலிருந்தால் தான் ஆன்மா என்று ஒன்று இருக்க முடியும் உயிர் உள்ளவரைத்தான் அதுவும் இருக்க வாய்ப்புண்டு ஆன்மா என்பது உண்மையில் மனசாட்சியே. மனசாட்சி என்பதும் ஒரு சமூக பிரக்ஞை சமுதாய கருத்தோட்டத்தில் நிலவி வரும் நல்லொழுக்க நெறிகள் கோட்பாடுகளைப் பற்றி உள்ளத்தின் ஆழத்தில் வலுவாக பொதிந்து நிற்கும் உணர்வு நிலைதான் ஆன்மா என்று அடையாளம் சுட்டப்படுகின்றது. உயிர் பிரிந்து விட்டால் உடல் அழிந்து விடுகிறது. உடல் அழிந்த பிறகு மனசாட்சியோ அல்லது ஆன்மாவோ அல்லது வேறு எந்த உணர்வும் தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை. இதற்கு மாறாக கருத்துகள் எல்லாம் மூட நம்பிக்கைகளே.
எனக்கு இப்போது 80 (எண்பது) வயது முடிந்து விட்டது. சில மாதங்களுக்கு முன் எனது உடல்நிலை நோய் வாய்ப்பட்டிருந்த பொழுது (சகோதர சகோதரிகள்) ஜெபம் செய்து இயேசு பிரானிடம் எனது உடல் தேறுவதற்காக நீண்ட நேரம் வேண்டிக்கொண்டனர். அந்த கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்த பொழுது மிகவும் வேதனைப்பட்டேன்.
இயற்கையை வென்று இப்பிரபஞ்சத்தையே அலசி ஆய்வு செய்து பிரமாண்டமான முன்னேற்ற மடைந்து விஞ்ஞானப் புரட்சி சிறகடித்து பறக்கின்ற இன்று மனிதனை எவ்வளவு இழிவு படுத்தி தங்களது அறியாமையை இன்றும் மனிதனை மக்கள் கடவுள் நம்பிக்கையின் பெயரால் தொடர்வது வேதனை தருகின்றது. ஜெபத்தை நடுவில் நிறுத்தச் சொல்ல விரும்பினேன், ஆயினும் எனது உடன் பிறப்புகளின் உள்ளங்களை புண்படுத்த விரும்பாததால் மறுநாள் காலையில் துயில் எழுந்த பிறகு அவர்களுக்கு விளக்கமளித்தேன். அவர்கள் எனது விளக்கத்தை கேட்டு வருந்தியிருப்பார்கள். இந்த நிகழ்ச்சியின் பிரதிபலிப்பே இந்த சாசனம்.
எனது உடல் நலம் பாதிக்கப்பட்டால் திறமையான மருத்துவருக்கு ஏற்பாடு செய்யவும். இதை விடுத்து விட்டு இறைவனிடம் முறையிடுவது பயனற்றது. மருத்துவம் வெற்றி பெறாவிட்டால் மரணத்தை தவிர்ப்பது சாத்தியமில்லை. இறைவனிடம் எத்தனை மணி நேரம் தொடர்ந்து முறையிட்டுக்கொண்டிருந்தாலும் இயற்கை எய்துவதை தவிர்க்க இயலாது.
ஆதனால் எனது உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டால் உறவினரும், நண்பர்களும் தோழர்களும் சிறந்த மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எனது காதில் விழும்படி எனக்கு புரியும் வகையில் எந்த விதமான ஜெபமோ அல்லது ஆச்சாரமோ கடைபிடிக்கக்கூடாது. அப்படி செய்தால் எனது உணர்வுகளை வேதனைக்கு உட்படுத்தி என்னை வதைக்கின்ற செயலாகும். என்னை துன்புறுத்த வேண்டாமென கேட்டு கொள்கிறேன்.
நான் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும்பொழுது எனது இல்லத்தில் ஜெபம் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். கிறிஸ்துவ குடும்பங்களில் மரணப்படுக்கையில் இறுதி நேரம் நெருங்குவதாக தெரிந்தால் இராப்போஜனம் அளித்து பாவ மன்னிப்பு தேடிக் கொடுக்க முயற்சி செய்வார்கள். இது எனக்கு செய்யக்கூடாது என்று கண்டிப்பாக கூறுகிறேன்.
வாழ்க்கை முழுவதும் பல்வேறு பாவங்களை அதாவது ஒழுக்கமற்ற காரியங்களை செய்து விட்டு உயிர் துறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஆண்டவனிடம் பாவமன்னிப்பு பெற்று சொர்க்கத்தில் இடம் தேடிக் கொள்வது சரியாகாது. ஆண்டவனை ஏமாற்றுவதல்லவா? அப்படி ஒரு இடம் எனக்கு தேவையில்லை. மோட்சம் நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதைகளே. இந்த உலக வாழ்க்கை ஒன்றுதான் உண்மை, யதார்த்தம், மரணத்திற்கு பிறகு மனிதன் விடுதலை பெறுவது என்பதே ஒரு மோசடியாகும்.
இந்த உலகில் உயிருடன் வாழும்பொழுது ஒழுக்கமாகவும் நேர்மையாகவும், பிற மனிதர்களிடம் அன்பும் சகோதரத்துவமும், தோழமை உணர்வும், உறவும் கொண்டவனாக வாழ்வதும் இதற்கு தடையாக விருக்கும் தனியுடமை சுரண்டல் சமுதாயத்தை ஒழித்து ஒரு சமத்துவ சமதர்ம பேதங்களற்ற சமுதாயத்தை அமைக்க தன்னலமின்றி போராடுவதும் தான் மிக உன்னதமான இலட்சியமாகவும் உயர்ந்து நிற்கும் ஒழுக்க நிலையாகவும் நான் நம்புகிறேன்.
இதற்காகத்தான் உலகில் தோன்றிய தத்துவ ஞானிகளெல்லாம் – புத்தர், இயேசு, முகமது போன்றவர்கள் நல்ல போதனைகளை அளித்துள்ளார்கள். இவர்கள் ஒரு நல்ல ஒழுக்கமான தனி மனிதனை ஒரு சிறந்த மனித சமுதாயத்தை இந்த பூவுலகில் உருவாக்கி காட்ட இயலாது என்று கணித்து மரணத்திற்கு பின் விடுதலை பெற்ற மனிதர்களை மறு உலகத்திலாவது காண வேண்டும் என்று தங்களது ஆர்வத்தை கற்பனையில் வெளிப்படுத்தினார்கள், ஆனால் இந்த உலகிலேயே மனிதனை மனிதன் சுரண்டாத மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத மனிதனை மனிதன் தன்னைப்போல் நேசிக்கின்ற, மனித உழைப்பை மதித்து மனிதர்கள் அனைவருக்குமான வாழ்வை அமைக்கின்ற ஒழுக்க அறநெறிகளை செயல்படுத்த வாய்ப்புள்ள ஒரு மகோன்னதமான பொது உடைமைச் சமுதாயத்தை அமைப்பதுதான் மிகச் சிறந்த லட்சியமாகும்.
இந்த புனித லட்சியத்திற்காக எனது 20 வயதிலிருந்து என்னை ஓரளவு இன்றளவும் ஈடுபடுத்திக் கொண்டு போராடிக்கொண்டு, ஒழுக்க கேடுகளற்று குணக்கேடுகளைத் தவிர்த்து வாழ்ந்துள்ளேன் என்பது எனக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும் பெருமித உணர்வும் அளிக்கிறது. இனியும் நான் வாழ்கின்ற வாய்ப்புள்ள சில ஆண்டுகளில் தடம் புரளாது வாழ முயற்சிப்பேன்.
நான் ஒரு கிருஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை தாத்தா பூட்டனார் கிருஸ்துவ மத உபதேசியார்களாக வாழ்ந்தவர்கள். எனது உடன் பிறப்புகளும், வாரிசுகளும் கிருஸ்துவர்களே. ஆதலால் எனது உயிர் பிரிந்த பிறகு எனது சபையின் கல்லறை தோட்டத்தில் எனது துணைவியாரின் கல்லறையிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு கிருஸ்துவ முறையை பின்பற்றுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. எனது துணைவி மற்றும் இதர உறவினர்களுடன் எனக்கும் சேர்ந்து நினைவஞ்சலி செலுத்துவதற்கு இது வசதியாக இருக்கும் என்பதால் இதை நான் வேண்டி விரும்புகிறேன். இவர்களையெல்லாம் நான் மிகவும் நேசித்தவன், இவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவன்.
நான் கம்யூனிஸ்ட் கட்சியில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினராக இருந்துள்ளேன். எனது கட்சி எனது மறைவிற்குப் பிறகு அஞ்சலி செலுத்தி கௌரவிக்க விரும்பினால் அதை அனுமதிக்கும் படி எனது குடும்பத்தாரை பணிக்கின்றேன்.
“நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்துக் கொண்டேன்” என்ற வாசகத்தை மட்டும் எனது கல்லறையில் பொறிக்கவும். விசுவாசத்தை காத்துக் கொண்டேன் என்ற வாசகத்தை சேர்க்க வேண்டும். இது தவறான வியாக்கானத்திற்கு இடமளிக்க வாய்ப்புண்டு.
உள்ளமும், உடலும் ஆரோக்கியமாகவும், திடமாகவும் இருக்கும் பொழுதே இதை என் கைப்பட எழுதி வைக்கிறேன் எனது ஒரே மகளும் பேத்திகளும் தொலைதூரத்தில் வாழ்வதால் இதை எழுதி வைப்பது தேவையாகிவிட்டது.
டி.ஞானையா
நன்றி  தீக்கதிர்  https://theekkathir.in/2017/07/14/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/

கருத்துகள் இல்லை: