செப்டம்பர் 13, 2015

அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் ஏழாவது மனிதன்-தினமணி கட்டுரை!

அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 'ஏழாவது  ஊதியம்  

மச்சம் உள்ளவனுக்கு மத்திய அரசில் வேலை' என்று புதிதாகச் சொலவடை உருவானாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஆணையம் வந்து 'ஊத' வைத்துவிடுகிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு இதில் ஏக்கமும் பொறாமையும் இருந்தாலும், 'இதர வருவாய் இனங்கள்'என்று பார்த்தால் மாநில அரசு ஊழியர்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். (நம்மைச் சொல்லுங்கள் அன்றாடங்காய்ச்சி!)




தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அரசு ஊழியர்கள்தான் `இந்திராணி'கள் (இந்திராணி முகர்ஜிக்கள் அல்ல). அவர்களுடைய 'வருவாய்'க்கும் 'வளத்'துக்கும் 'வசதி'க்கும் ஒரு குறைவும் இல்லாமல் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால், 'தமிழகத்தின் வருவாயில் 70% மாநில அரசின் ஊழியர்களுடைய ஊதியம், படிகள், ஓய்வூதியத்துக்கே போய்விடுகிறதே?' என்று பொருளாதாரம் தெரிந்த சிலர் புலம்பியபோது, 'மத்திய அரசின் மானியம், நிதி ஒதுக்கீட்டைச் சேர்த்தால் இந்த சதவீதம் குறையுமே!' என்ற பதில் வந்தது தமிழகத்தை அடிக்கடி 'ஆண்டு அனுபவித்த' மூத்த அரசியல் தலைவரிடமிருந்து. அளவில்லாமல் பெற்று வளமோடு வாழ வழிசெய்து தருகிறவர்கள் அல்லவா அரசு அதிகாரிகள்!

இப்போது மத்திய அரசு ஊழியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையிலான 'ஏழாவது' ஊதியக் குழுவின் பரிந்துரைகளை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு என்று நம்முடைய ஜனநாயகம் 'திட்டமிட்ட பாதையில்'போய்க்கொண்டே இருக்கிறது. 2014 பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, 2015 ஆகஸ்ட்டில் அறிக்கை தந்திருக்க வேண்டும். பரிந்துரைகள் எப்படியிருந்தாலும் 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும், புதிய ஊதிய விகிதம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அலுவலக கேன்டீன்களில் 'அதிகாரபூர்வமாக' நம்புகிறார்கள்.

ஏராளமான மத்திய அரசு ஊழியர்களைப் போல நிதியமைச்சர் ஜேட்லி உள்ளிட்ட நிதித் துறையினரும் உயர் ரத்த அழுத்தத்துடன் இதன் பரிந்துரைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழகத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்குத் தரப்படும் ஊதிய விகிதம், படிகள், பதவி உயர்வுகள், ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு ஆகிய அனைத்தும் தங்களுக்கும் வேண்டும் என்று கேட்பதுதான் தமிழர்களின் பண்பாடு. ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் பாவம்! 'ஐக்கிய நாடுகள் சபையில் தரும் ஊதிய விகிதத்தை எங்களுக்கும் வழங்கு' என்று அவர்களால் கேட்க முடிவதில்லை!

'கூந்தல் இருக்கிறவர்கள் வாரி முடிந்துகொள்கிறார்கள்' நமக்கு ஏனய்யா இந்த ஊதியக் குழு பரிந்துரை சமாச்சாரம் என்று சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. இருக்கிறது ஸ்வாமி! ஊதியக் குழு பரிந்துரைகள் அமலாகும் ஆண்டுகளில் நல்லதும் உண்டு, கெடுதலும் உண்டு.

மத்திய அரசாங்கத்துக்குச் செலவும், பட்ஜெட் பற்றாக் குறையும் அதிகமாகும். ஒரு சில அத்தியாவசியத் துறைகளுக் கான ஒதுக்கீட்டைக்கூட இழுத்துப் பிடிக்கும் அளவுக்குப் போகும் (வேறென்ன கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலை உறுதித் திட்டம் போன்றவைதான்!). ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையால் 2008-09 நிதியாண்டில் அரசின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) 6% ஆனது. இப்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு தரப்படும் மொத்த ஊதியத்தையும் கூட்டினால், ஓராண்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 1% தான் வருகிறது. எனவே, ஊதிய விகிதமும் படிகளும் அதிகரித்தால் இது மேலும் சற்றே அதிகரிக்கும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் 16% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது (இந்த அளவுக்கு உயராவிட்டால் கட்டுரையாளர் பொறுப்பல்ல). இதனால் 2016-17-வது நிதியாண்டில் கூடுதல் செலவு ஜி.டி.பி-யில் 0.2% முதல் 0.3% வரை இருக்கும் என்கிறார்கள்.

எல்லாம் சரிதான். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இப்போது தரப்படும் மொத்த ஊதியம் ஜி.டி.பி-யில் வெறும் 1%. மாநில அரசு ஊழியர்களுடைய பங்கு 4%. எனவே மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 16% உயர்ந்தால்கூட மொத்த ஜி.டி.பி-யுடன் ஒப்பிட்டால் அது வெறும் 0.8%. 5 ஆண்டுகளால் இதை வகுத்தால் ஆண்டுக்கு வெறும் 0.16%. அதாவது, கடலில் கரைத்த பெருங்காயம். 'மத்திய அரசுக்கு நிறைய நிதிச்சுமை' என்று அருண் ஜேட்லி தோளைக் குலுக்கினால் நம்பாதீர்கள், அத்தனையும் நடிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஊதிய உயர்வால் நுகர்வுப் பண்டங்களுக்கான தேவையும் விற்பனையும் அதிகரிக்கும். அது தொழில், வர்த்தகம், சேவைத் துறைகளில் நன்கு எதிரொலிக்கும். காரணம், மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 50 லட்சம் பேரும் ஓய்வூதியர்கள் 55 லட்சம் பேரும் இருக்கின்றனர். ராணுவ வீரர்கள், ஓய்வூதியர்கள் தனி. 2007-08 முதல் 2011-12 வரையில் ஆறாவது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு ஊதியம், படிகள் ஆகியவை இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டதாக 14-வது நிதிக்குழு அறிக்கை அளித்திருக்கிறது. இதேபோல, தங்களுடைய ஆண்டு வருவாயில் அரசு ஊழியர்களுக்கு மாநிலங்கள் செலவிடும் தொகை 29% முதல் 79% வரை இருக்கிறது என்பதும் உண்மைதான்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கொரு முறை சிறிய ஊதிய அதிகரிப்பு (இன்கிரிமென்ட்), விலைவாசி உயரும்போதல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதால் ஊதியக் குழுப் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு தேவையில்லை என்பது (அரசு வேலைகிடைக்காத) பலரின் வாதம். இது தவறானது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்-ல் படித்தவர்களுக்குக் கிடைப்பதைப் போன்ற ஊதிய விகிதம் அரசு ஊழியத்தில் இருப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு 3% மட்டுமே ஊதிய உயர்வும் 5% அகவிலைப்படியால் உயர்வும் கிடைக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்படை ஊதியமும் அகவிலைப்படி உயர்வும் இணைந்து ஊதியம் உயர்ந்துவிட்டதைப் போலத் தோன்றினாலும் அது அவர்களுடைய ஆண்டுக் கணக்கிலான பணி அனுபவம் ஆற்றலுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. மத்திய அரசில் கடைநிலை ஊழியருக்கும் உச்சபட்சத்தில் இருக்கும் உயர் அதிகாரிக்கும் இடையிலான ஊதிய விகித வேறுபாடு 1:12 என்ற கணக்கில் இருக்கிறது. அதாவது, கடை நிலை ஊழியரின் ஊதியம் ரூ. 10,000 என்றால் மேலதிகாரியின் ஊதியம் ரூ. 1,20,000. தனியார் துறையிலோ இதைப் போலப் பல மடங்கு.

அரசு ஊழியர்களைவிடத் தனியார் ஊழியர்கள் திறமையானவர்கள், பொறுப்பானவர்கள் என்று சமாதானம் சொல்வார்கள். உலகமயம், தாராளமயம் தோன்றிய காலத்திலிருந்தே மக்களிடைய உலவும் அசைக்க முடியாத மூடநம்பிக்கையே இது! தனியார் துறையில் எப்படிப்பட்ட அதிபுத்திசாலிகளெல்லாம் இருக்கிறார்கள் என்பது (அத்துறையில் உள்ள) நமக்குத் தெரியாததா என்ன? மேலும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்-ல் படித்தவர்களைப் போல மத்திய அரசு ஊழியர்கள் நாட்டைவிட்டு ஓடுவதில்லை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சுதேசிகள்தான். இதையெல்லாமும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
- நன்றி ராணிபேட்டை ரங்கன், தினமணி 

கருத்துகள் இல்லை: