செப்டம்பர் 19, 2012

FDI in Retail Business


சில்லறை வர்த்தகத்தில் 51% விமானத்துறையில் 49% அன்னிய நேரடி ஒளிபரப்பு நிறுவனங்களில் 79% அன்னிய நேரடி முதலீடு, அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.15,000 கோடி 
நிதிதிரட்டுதல் என் அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது . இதுநிலக்கரி சுரங்க உழலை மறைக்க திசைதிருப்ப அரசு எடுத்த முடிவு என் அரசியல் நோக்கர்கள் கருதினாலும் கார்பொரேட் களுக்கான , மக்களுக்கு எதிரான அரசின் முடிவுகள் இவை. இது குறித்த தினமணியின் தலையங்கத்தை கீழே தந்துள்ளோம் 

தலையங்கம்: விலை பேசப்படுகிறோமோ?


டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கட்டுப்பாடு என்று அதிரடியில் இறங்கிய மத்திய அரசு இப்போது சில்லறை வர்த்தகத்தில் 51% அன்னிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுகளைக் கண்டித்து பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் வரும் 20 ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நாடு முழுவதும் நடத்துவதாக அறிவித்துள்ளன. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள், இந்த முடிவுகளைக் கண்டித்துள்ளன; விலக்கிக்கொள்ளாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரும் என்று எச்சரிக்கின்றனவே தவிர, ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகவும் இருக்கின்றன. ஆகவே மத்திய அரசு தனது முடிவுகளில் எந்த மாற்றமும் செய்யாது.
அன்னிய நேரடி முதலீட்டை விமானத்துறையில் 49% என்றும், ஒளிபரப்பு நிறுவனங்களில் 79% என்றும் அறிவித்திருப்பது குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை. அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.15,000 கோடி நிதிதிரட்ட மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றியும் யாரும் அதிகமாகக் கவலைப்படவில்லை. எதிர்ப்புகளும் இல்லை.
ஆனால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால், உள்ளூர் வணிகம், சிறுவணிகம் பாதிக்கப்பட்டு பல்லாயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இதற்கு மிகப்பெரும் எதிர்ப்பு இருக்கிறது. இத்தனைக் காலமாக இந்த முடிவைத் தள்ளிப்போட்டுவந்த காங்கிரஸ் கட்சி, தற்போது முழுவீச்சில் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
51% மட்டுமே தற்போது சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்றும், இத்தகைய பன்னாட்டு சில்லறை வணிகங்களை அனுமதிப்பது மாநில அரசுகளின் விருப்பதைப் பொருத்தது என்றும், குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் வாழும் நகரங்களில் மட்டுமே இத்தகைய நிறுவனங்கள் கடை திறக்கும் என்றும் மத்திய அரசு சொல்கிறது. இவற்றில் ஒன்றுகூட ஏற்புடையவை அல்ல.
வால்மார்ட் இந்தியா நிறுவனம் தனது கடைகளை 51% முதலீட்டில் தொடங்கினாலும் இந்த முதலீட்டு அளவை மெல்ல மெல்ல உயர்த்திக்கொண்டே சென்று, 100% முதலீடாக மாற்றுவது எளிது. இத்தகைய தந்திரங்கள் புதியதும் இல்ல.
மாநில அரசுகளின் விருப்பத்தைப் பொருத்தது என்பதும்கூட, வெறும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஒரு உத்தி மட்டுமே. இந்தியாவின் பிற மாநிலங்களில் கடை விரிக்கும் இவர்கள், அனுமதி கிடைக்காத மாநிலங்களில் மறைமுகமாக வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு செயல்பட்டால் அதைத் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் தற்போது "ஷாப்பிங் மால்' கலாசாரம் பரவலாகிவிட்டது. சிறு நகரங்களில்கூட தற்போது 10 லட்சம் பேர் வசிப்பது சாதாரணமான விஷயமாகிவிட்ட நிலையில் மத்திய அரசு சொல்லும் காரணங்கள் எதுவும் ஏற்புடையவை அல்ல.
பன்னாட்டு நிறுவனங்களின் சில்லறை வணிக நிறுவனங்களை அனுமதிப்பதால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. தற்போது மத்திய அரசின் இந்த முடிவுகள் வெளியானவுடனே, இந்தியாவில் பொருளாதாரம் சரியான பாதையில் திருப்பப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின்றன. பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரிக்கும் என்கிறார்கள். ஒட்டுமொத்த கொள்முதல், குளிர்பதன வசதி, அதிகஅளவில் நுகர்வோர் எண்ணிக்கை எல்லாமும், இத்தகைய சில்லறை வணிகக் கடைகளில் மிக மலிவான விலைக்குக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒரு நுகர்வோருக்குத் தான் வாங்கும் பொருளின் விலை மலிவு என்ற எண்ணம், அடுத்த கடையில் விற்பனை செய்யப்படும் பொருளின் விலையைவிட இந்தக் கடையில் அதே பொருளின் விலை குறைவாக இருப்பதை ஒப்பிடுவதன் மூலம்தான் ஏற்படுகிறது. நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த ஒப்பீட்டு உணர்வைத்தான் தற்போதைய சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதிகபட்சமான விலை (எம்ஆர்பி) என்பதில் 10% விலைக்கழிவு தருகிறார்கள். இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்கிறார்கள். இதெல்லாம் ஆரம்பம். போட்டியாக இருக்கும் சிறு வணிகர்கள் அழிவது வரை மட்டுமே அது தொடரும்.
ஒரு பொருளின் விலையை ஒப்பிடக்கூடிய கடைகளே இல்லை என்ற நிலை வந்துவிட்டால், இந்தப் பன்னாட்டுச் சில்லறை வணிக வளாகங்கள் வைத்ததுதான் விலையாக இருக்கும். அதன் விலை மலிவா அல்லது அதிகமா என்பதை ஒப்பிடவே முடியாது. இந்த நிறுவனத்தில் தான் வாங்கும் பொருளின் விலை நியாயமானது என்ற நம்பிக்கைக்குத் தள்ளப்படுவார்களே தவிர, உண்மையான விலை என்ன என்பதைக் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பே கிடைக்காது.
சீனாவில் கூட சில்லறை வணிகத்தில் இத்தகைய 100% அன்னிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்கு சில்லறை வணிகர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் சீனாவை இந்தியாவுடன் ஒப்பிடுவது எந்த வகையிலும் சரியானது அல்ல. சீனாவில் அமைக்கப்படும் இத்தகைய பன்னாட்டு சில்லறை வணிக வளாகங்கள் ஊருக்கு வெளியே தொலைவில் மட்டுமே அமைக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில், சில்லறை வணிகர்கள் நிறைந்திருக்கும் பகுதியில்தான் மிகப்பெரிய கடையைத் திறப்பார்கள். தடைபோட முடியாது.
தமிழ்நாட்டில் மதுபானக்கூடம் (பார்) இருக்கும் பகுதியில் எழுதப்படாத ஒரு சட்டம் அமலில் இருக்கிறது. அதாவது, மதுபானக்கூடத்தின் அருகில், 100 மீட்டர் தொலைவுக்குள், எந்த பெட்டிக் கடையும் தண்ணீர் பாக்கெட், சோடா, குளிர்பானம் விற்கக்கூடாது. மீறி விற்றால், அந்தக் கடை அகற்றப்படும். "பார்' வணிகத்துக்கே பத்து பெட்டிக்கடை பாதிக்கப்படும் என்றால், பார்முழுதும் வணிகம் செய்வோருக்காக கடைகள் மற்றுமல்ல, தடைகளும் அகற்றப்படாதா?
போகிற போக்கில் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் ஒப்படைத்துவிட்டுப் போகாமல் இருந்தால் சரி...!

நன்றி: தினமணி 


கருத்துகள் இல்லை: